Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

Monday, December 18, 2006

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி !

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா சற்று நேரம் முன்பு, வெற்றி பெற்று வரலாறு படைத்தது !!! தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது ! இதற்கு முன் நடைபெற்ற ஒரு நாள் பந்தயங்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, இவ்வெற்றி ஒரு மகத்தான வெற்றி என்று நிச்சயம் கூற முடியும். அதுவும் ஓர் அணியாக விளையாடி, இந்த உன்னத வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் பங்களித்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்று சற்று உடல் நலக் குறைவால் அலுவலகம் செல்ல முடியாமல் போனது கூட நல்லது தான் :) டிவியில் இந்திய வெற்றியையும், இந்திய அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே ! எப்போதாவது தானே இது போன்ற தருணங்கள் காணக் கிடைக்கிறது ;-)

இந்த வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் காரணமாய் இருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் சச்சின் 44 ரன்களும், கங்குலி 51 ரன்களும் எடுத்து, இந்தியா 249 ரன்கள் சேர்க்க உதவினர். VRV சிங்கும் இன்னிங்க்ஸின் இறுதியில் கங்குலிக்கு துணையாக நின்று 29 ரன்கள் எடுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும் !!!

தென்னாபிரிக்க அணி பேட் செய்தபோது, ஓர் இளஞ்சிங்கத்தை போல் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும், அனுபவமிக்க ஜாகீரும், அனில் கும்ப்ளேயும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை 84 ரன்களுக்கு சுருட்டினார்கள் ! சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் தலா இரண்டு அருமையான காட்ச்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் 2-வது இன்னிங்க்ஸில் சேவாக் அதிரடியாக ஆடி 33 ரன்களும், கங்குலி 25 ரன்களும், லஷ்மண் நிதானமாக ஆடி 73 ரன்களும் எடுத்தனர். இன்னிங்க்ஸின் இறுதியில் ஜாகீர், லஷ்மணுக்குத் துணையாக நின்று ஆடி, 37 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ! இந்தியா 236 ரன்கள் எடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 402 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

தென்னாபிரிக்கா, இரண்டாவது இன்னிங்க்ஸில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து, 123 ரன்கள் வித்தியாசத்தில், நான்காவது நாள் உணவு இடைவேளை முன்பாகவே தோல்வியைத் தழுவியது ! ஸ்ரீசாந்த், ஜாகீர், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனில் கும்ப்ளே, போலக்கும், பிரின்ஸ¤ம் கூட்டு சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும், clean bowled செய்து தான் ஒரு மாஸ்டர் பந்து வீச்சாளர் என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்தார் !! பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து, சதத்தை நழுவ விட்டார். 2-வது இன்னிங்க்ஸிலும், சேவாக் இரண்டு நல்ல காட்ச்கள் பிடித்தார்.

இந்த அற்புதமான இந்திய வெற்றிக்கு, இளமையும், அனுபவமும் ஒரு சேர நின்று வழி வகுத்தன என்று சந்தோஷமாகக் கூறலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 271 ***

Sunday, December 17, 2006

குழந்தை ஸ்வேதா நலம்

அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 270 ***

Sunday, December 10, 2006

சாந்தி - வெள்ளி வென்ற தங்க மங்கை

தோஹாவில் நடைபெறும் ஆசியாத் விளையாட்டுக்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சவுந்தராஜன் என்ற 24 வயது வீராங்கனை, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று (2:03:16) வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! மூன்றாவது இடத்தைப் பிடித்த கழகஸ்தானைச் சேர்ந்த விக்டோரியாவை 3/100 வினாடிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
Photobucket - Video and Image Hosting
அவரது ஓட்டத்தை டிவியில் பார்த்தேன், நிஜமாகவே கடைசி 100 மீட்டர் அபாரமாக, புயல் போல ஒடி, அனுபவமிக்க பலரை பின்னுக்குத் தள்ளி, இந்த சாதனையைப் புரிந்தார் !!! பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெருவாரியான இந்தியர்கள் தன்னை உற்சாகப்படுத்தியது, பதக்கம் பெற வேண்டும் என்ற தனது உத்வேகத்தை அதிகப்படுத்தியது என்று சாந்தி கூறியிருக்கிறார். தனது பயிற்சியாளர் நாகராஜனையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, சாந்தியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டி அவருக்கு 15 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில், ஓர் ஏழைக் குடும்பத்தில் (மொத்தம் ஏழு பேர்) பிறந்த சாந்தி, முதலில் ஓடத் தொடங்கியதே தனது குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கத் தான். ஏனெனில், அவரது (கூலி வேலை பார்க்கும்) தாயாரின் சொற்ப வருமானத்தில் சாந்தியின் குடும்பம் வறுமையின் கொடுமையில் வாடியது. இதய நோயில் வாடும் அவரது தந்தை, வேலைக்குச் செல்ல முடியாத சூழல் !

சென்ற வருடம், பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பெற்றதில், சாந்திக்கு ரூ.25000 கிடைத்தது. அதைக் கொண்டு அவரது நான்கு தம்பி தங்கைகளின் கல்விச் செலவை சமாளித்தார். பின்னர், பெடரேஷன் கோப்பை 800 மீ ஓட்டத்தில், முதலிடம் வந்து தங்கம் வென்றார். அதன் பின்னர், செப்டம்பர் 2005-இல் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீ ஓட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகுந்த குடும்ப கஷ்டங்களுக்கிடையில், அயரா முயற்சியோடு, படிப்படியாக முன்னுக்கு வந்த சாந்தியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு தடகள வீராங்கனைக்கு, சரியான சத்துணவு மிக அவசியமானது. ஆனால், அவரது குடும்பமே அவரை நம்பியிருக்கும் சூழலில், சாந்தி பல நேரங்களில் பட்டினி கிடந்திருக்கிறார். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் சாந்தி, தனது ஓட்டப்பந்தய வெற்றிகள் தனக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 269 ***

Friday, December 08, 2006

Warning ! Hazardous Material

இதைப் பிரசுரிப்பதால், பெண்ணியவாதிகள் என்னை கண்ணியமற்றவன் என்று எண்ண வேண்டாம் !!! Please take it in good humour and please do not come knocking at my door, with brick bats :))) வேண்டுமானால், இந்த 'data sheet'-ஐ எழுதியவரைக் கண்டுபிடித்து உங்கள் முன் ஆஜர்படுத்த ஆவன செய்கிறேன் !

Photobucket - Video and Image Hosting

எ.அ.பாலா

### 268 ###

Wednesday, December 06, 2006

சிந்திக்க மறுக்கும் சிந்தனாவியாதிகள்

கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி, இவ்வாறு எழுதியிருந்தார்:
**************************
எ.அ.பாலா,
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. வலைப்பதிவு பக்கமும் வர முடியவில்லை. இன்று வாசித்த ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட (அட ...அனானியாத் தான்) எண்ணி எழுதியது நீண்டு விட்டதால், தங்களுக்கு அனுப்புகிறேன். பதிவாக இடுவீர்கள் என்று நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால் குறிப்பிட்ட அப்பதிவில் பின்னூட்டுவதை விட (ஜால்ரா காதைப் பிளப்பதால்) தாங்கள் பதிவாக பிரசுரித்தால் பெட்டர் என நினைக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)

***************************
'இதில் என்ன இருக்கிறது' என்பதாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************

"எங்கள் வீட்டில் தேங்காய் குழம்பு" இப்படி சொன்னவளிடம் எதிர் வீட்டுக்காரி " எங்கள் வீட்டில்
யாருக்குமே தேங்காய் ஆகாது..நாங்கள் தேங்காயே வாங்குவதில்லை " சொல்லும் போதே மனதுக்குள்
தேங்காயை துறுவு துறுவென்று துறுவி தேங்காய் வாங்க வக்கில்லாத அகங்காரத்தை சேர்த்து மனதுக்குள் போட்டு மென்று அரைத்த படி கடவாயில் தேங்காய் நினைப்பின் எச்சில் ஊற சொல்வாளாம். அடுத்த
வீட்டுக்காரியின் பொறாமை பற்றி இந்த மாதிரியாக வர்ணித்திருப்பார் ஒரு எழுத்தாளர்...தமிழ்
கதையில்தான்...இப்படி இருக்கிறது ஒரு வலைப்பதிவரின் ஆதங்கம்....

விஷயம் ஒன்றுமில்லை....டிசம்பர் கச்சேரிகளில் தமிழில் பாடுவதில்லையாம்...பாடும் ஒரு
குறிப்பிட்ட சாதி பொண்கள்...!!!!????

இந்த மாதிரி அதிகம் (வெட்டி) உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு சில யோசனைகள்

முதலாவதாக இந்த சாதிக்காரர்கள் மட்டும் ஏன் பாட வேண்டும்...விருப்பமுள்ளவர் அனைவரும் தமிழில் பாடி தமிழ் வளர்க்கலாம்...

இரண்டாவதாக இப்படி தமிழல்லாத குறிப்பிட்ட மொழியில் பாடி ( தமிழ் வளர்க்காத ) கச்சேரிகளை புறக்கணிக்கலாம்

மூன்றாவதாக தமிழில் பாடுபவர்களை ஊக்குவிக்க ஏதாவது உபயோகமாக செய்யலாம்..

நாங்காவதாக எனக்கு பறை, தமுக்கு அடிக்கத் தெரியும் என்று பீற்றுவதை விட்டு விட்டு அரங்கேற்றம் செய்து தமிழ் பாரம்பரிய கலைகளை மக்களிடம் எடுத்து செல்லலாம்.

ஐந்தாவதாக தமிழில் மட்டுமே பாடி கச்சேரி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசை மானியம் வழங்கச் சொல்லி பரிந்துரையாவது செய்யலாம்.

இதெல்லாம் விட்டுவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் இழிவாக பேசி கூப்பாடு போடுவதாலெல்லாம் வலையுலகில் அரிப்பெடுத்து அலையும் சிலருக்கு சுகமாய் சொரிந்து விட உதவலாம்...ஆனால் இதனாலெல்லாம் தமிழ் வளர்ந்து விடாது...அரிப்பை சொரியும் போது சுகமாய் இருக்கும்...ஆனால் சொரிந்து சொரிந்து புண்ணாகுமே தவிர சொரிவது அரிப்புக்கு மருந்தாகுமா????

இவர்களே சொல்வது போல பட்டுப் புடவை சரசரக்க , போண்டா தின்பதற்காகவே ஒரு சில மாமிகள் மட்டுமே போய் புரியாமல் கேட்கும் சங்கீதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இத்தனை ஆற்றாமை???அங்கலாய்ப்பு???? இப்படி சிலர் பாடுவதும் கேட்பதும் எந்தவிதத்தில் தமிழ் வளராமல் தடுத்துவிட்டது....இத்தனைக்கும் பாடுபவர்கள்... அனைவரும் வாரீர்...ஆதரவு தாரீர் என்றெல்லாம் இவர்களைப் போய் கேட்டதாகக் கூட தெரியவில்லை...அப்படிக் கேட்டாலும் தமிழில் பாடாதவர்களுக்கு ஆதரவில்லை என தெள்ளத்தெளிவாக சொல்லி விடலாம்.இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் புத்தகங்களையும் புறக்கணித்து விடுங்கள்..அவர்களும் இதனால் சந்தாதாரர்கள் குறைந்தால் அதன் மூலம் பாடம் கற்று இந்த உதவாக்கரை கச்சேரிகளைப் பற்றி எழுதுவதை விட்டு விடுவார்கள்.

எனவே ஜென்டில்மேன்...மனதுக்குள் தேங்காய் தின்று கொண்டு..... தேங்காய் தின்னும் அடுத்தவனை பார்த்து கறுவுவதை விட்டு விட்டு..உண்மையில் தேங்காய் வாங்கித் தின்ன முயலுங்கள்....இதாவது தேவலை...இவர்களுக்கு பின்னூட்ட ஜால்ரா தட்டுபவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்....தேங்காய் என்றால் என்ன என்று கூட தெரியாது...ஆனால் இவர்களுக்கு தேங்காய் பிடிக்காது.....கொடுமையடா சாமி????????

இந்த வலைப்பதிவரின் நேர்மைக்கும் மேதமைக்கும் சில உதாரணங்கள்...பின்னூட்டத்தில் சங்கீதம் பற்றி தமிழ் பற்றி உண்மை அக்கறையுடன் பேசிய எவருக்கும் இவர் பதில் சொல்லியிருக்க மாட்டார்....சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்வது (தமிழ்) பழமொழி....அதைத்தவிர மற்ற அனைவருக்கும் வளைத்து வளைத்து பதில் பின்னூட்டம் கொடுத்திருப்பார்....

தலைப்பை மாற்றி வைத்தெல்லாம் நேர்மை பறை சாற்ற முடியாது....குறிப்பிட்ட ஜாதியத்தை திட்டுகிறேன் என்று குறிப்பிட்ட ஜாதியை திட்டும் மொள்ளமாரித்தனத்தை இதனாலெல்லாம் மூடி மறைக்கமுடியாது....Keep the title of your post as you wish...and blame and curse as much as you can.....This is a Free world, after all.

கி.அ.அ.அனானி
*************************

*** 267 ***

Monday, December 04, 2006

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM1

திருமங்கை மன்னன் - திருவல்லிக்கேணி
Photobucket - Video and Image Hosting

949@..
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2


பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன் ! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !

இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும்புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாக பெரியோர் கூறுவர்.
********************************

953@..
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6


ஆழ்வார், பக்திப் பேருவகையில், பெருமான் மேல் கொண்ட பேரன்பில் அருளிய இப்பாசுரத்திற்கு, அந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வண்ணம் பொருள் கூறுவது சிரமமே ! முயற்சிக்கிறேன் !

என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
********************************

966@
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9


பரமபுருஷனான எம்பெருமான், அவனது ஆயிரம் நாமங்களை பொருள் உணர்ந்து ஓதிய அடியார்களின் (முற்பிறவியின்)பாவங்களை களைந்து, துன்பம் எதுவும் அவரை நெருங்காதபடி ரட்சித்து, அவ்வடியார்கள் தன்னை வந்தடைவதற்கு அருள் செய்யும் பேரருளாளன். தாதுக்கள் நிறைந்த, எழில் மிக்க, சிவந்த அசோக மலர்களை, தீப்பந்துகள் என்று பேதமையில் எண்ணி அஞ்சி விலகும் வண்டுகள் வாழும், இமயத்துச் சாரலில் அமைந்த, திருப்பிரிதியின் நாயகனான அப்பிரானை வணங்கி, அவனைப் பற்றிடு என் நெஞ்சமே !
********************************

978@..
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1


ஒரு சமயம், வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவனும் ஆவான் என் தலைவன். அந்த ஒப்பிலாத பெருமானே கங்கைக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்புண்ணியத் தலத்தில், தேவலோகச் சோலைகளில் மலர்ந்து நறுமணம் வீசும், பூஜைக்கு உகந்த, அழகிய கற்பக மலர்களை வானவர்கள் பறித்து வந்து, அவன் திருவடியில் வைத்து வணங்குகின்றனர் !
*****************************

984@
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7


ஐராவதம் என்ற வெண்யானையையும், பாற்கடலை கடைந்தபோது உண்டான அமுதத்தையும், தேவலோகத்தையும், அதை அரசாளும் உரிமையையும் இந்திரனுக்கு அருளிய எம்பெருமானே, வேண்டுவனவற்றை எமக்கு உகந்து வழங்கும் என் அப்பன் ஆனவன் ! ஆயிரம் முகங்கள் கொண்டு அடியார்களுக்கும் வானவர்க்கும் அருள் வழங்கும் அக்கருணை வள்ளலே, இமயத்துச் சாரலில் உள்ள மந்திரமலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதிக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான் !
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா

*** 266 ***

Saturday, December 02, 2006

திவ்ய தேசம் 7 - திருக்கூடலூர்

Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு, ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
...................மூலவர் தரிசனம்...................
Photobucket - Video and Image Hosting
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
....................உத்சவ மூர்த்தி.................
Photobucket - Video and Image Hosting
தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். கோயிலுக்குள் இருக்கும் பலா மரத்தில் சுயம்புவாக திருச்சங்கின் வடிவம் உருவாகியிருப்பதைக் காணலாம்.
Photobucket - Video and Image Hosting
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !
....................நரஸிம்ம மூர்த்தி .....................
Photobucket - Video and Image Hosting
நந்தக முனிவரின் மகளான உஷய், தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது.

................மணவாள மாமுனிகள்..............
Photobucket - Video and Image Hosting
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
.......................சக்கரத்தாழ்வார்.................
Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
**************************************
1358@..
தாம்* தம்பெருமையறியார்*
தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*
காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*
கூந்தல்கமழும்* கூடலூரே (5.2.1)
******************************
1359@
செறும்திண்* திமிலேறுடைய* பின்னை

பெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*
நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*
குறிஞ்சிபாடும்* கூடலூரே (5.2.2)
********************************
1360@
பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு* அடியேன்

உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*
கள்ளநாரை* வயலுள்* கயல்மீன்

கொள்ளைகொள்ளும்* கூடலூரே (5.2.3)

என் அண்ணல், கோகுலத்து பாலகனாய், வாயிலிருந்து ஒழுக ஒழுக தயிரை உண்டு, என் உள்ளம் புகுந்த கள்வன் ! நாரைகள் வயல்களில் நின்றபடி காத்திருந்து, சூழ்ச்சியாக மீன்களை நீரிலிருந்து கவ்வியெடுக்கும் திருக்கூடலூரில் ஒப்பிலா அப்பிரானே எழுந்தருளியிருக்கிறான்.
********************************
1361@
கூற்றேருருவின்* குறளாய்* நிலம்நீர்

ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*
சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*
கோல்தேன்முரலும்* கூடலூரே (5.2.4)


சிறிய வாமன வடிவினனாய் மாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, மூவுலகையும் இறைந்து பெற்றவன் என்னப்பன் ! குடியானவர் தங்கள் தலைப்பாகையில் சூடியுள்ள மலர்களின் தேனுண்டு, இனிமையாக ரீங்காரமிடும் வண்டுகள் நிறைந்த திருக்கூடலூரிலும் அப்பெருமானே தங்கி அருள் பாலிக்கிறான் !
********************************
1362@
தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*
அண்டத்துஅமரும்* அடிகளூர்போல்*
வண்டலலையுள்* கெண்டைமிளிர*
கொண்டலதிரும்* கூடலூரே (5.2.5)


அண்டத்தை வியாபித்த பேருருவம் எடுத்த ஒளி மிக்க ஆதி பிரானை அடியார்கள் சூழ்ந்து போற்றி வணங்குகின்றனர் ! அவ்வண்ணலே, சூரிய ஒளி பட்டு மின்னும் மீன்கள், நீரின் மேற்பரப்பு அதிர,துள்ளி விளையாடும் சுனைகள் நிறைந்த திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான்.
******************************
1363@
தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*
துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*
எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)
**********************************
1364@
கருந்தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*
பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)


கரிய, குளிர்ந்த கடல்களையும், மலைகளையும், உலகங்களையும், பிரளயத்தின் போது காக்க வேண்டி உண்ட பரந்தாமன், முல்லைக் கொடி வளர்ந்து பரவி, குருந்த மரங்களை தழுவி மறைத்து விடும் வனப்புடைய திருக்கூடலூரில், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான்.
*******************************
1365@
கலைவாழ்* பிணையோடு அணையும்* திருநீர்

மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*
இலைதாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்

குலைதாழ்கிடங்கின்* கூடலூரே (5.2.8)
************************************
1366@
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*
அருகுகைதைமலர* கெண்டை

குருகென்றஞ்சும்* கூடலூரே (5.2.9)

என் ஐயனை அடைய வேண்டும் என்கிற பேரவா நாளுக்கு நாள் பெருக, என் உள்ளமானது சதா சர்வ காலமும் அவன் ஒருவனையே எண்ணி உருகுகிறது ! கரைக்கு அருகில் வளர்ந்திருக்கும் தாழை மலர்களை, தம்மைக் கொத்த வந்த நாரைகள் என்றெண்ணி அஞ்சும் மீன்கள் வாழும் தடாகங்கள் நிறைந்த திருக்கூடலூரில், கருணை மிக்க அவ்வண்ணல் எழுந்தருளி உள்ளான்.
********************************
1367@..
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)
******************************************
...............ஊர்த்வ புண்ட்ரம்..................
Photobucket - Video and Image Hosting
ஒரு சமயம், கொள்ளிடம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இத்திருக்கோயில் மூழ்கி, விக்ரகங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தில் மூழ்கிய விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தற்போது நாம் காணும் (பாபனாசத்துக்கு அருகே பெருமாள் கோயில் என்ற கிராமத்தில் உள்ள) கோயிலை, ராணி மங்கம்மாள் கட்டியதாக (அல்லது புதுப்பித்ததாக) தெரிய வருகிறது.
Photobucket - Video and Image Hosting
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

புகைப்படங்கள் உதவி: ராமானுஜ தாஸர்கள் வலைத்தளம்

*** 265 ***

Thursday, November 30, 2006

கயர்லாஞ்சி பயங்கரம் - உருக்கும் தகவல்கள்

ஒரு தலித் குடும்பம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகம் பற்றிய என்னுடைய முந்தைய பதிவின் தொடர்ச்சியாக சில தகவல்களைத் தருகிறேன்.

உயர்த்தப்பட்ட சாதி ஆண் மிருகங்களின் வன்முறைக்கும், வன்புணர்வுக்கும் ஆளாகி கொடூரமாக கொல்லப்பட்ட அந்த ஏழைத் தாயின் பெயர் சுரேகா, வயது 44. அவரது மகளின் பெயர் பிரியங்கா, வயது 17. சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்ட மகன்களின் பெயர்கள் ரோஷன் (வயது 19) மற்றும் சுதீர் (வயது 21). குன்பி என்ற அந்த உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 40 கயவர்கள், நால்வரும் தப்பித்து ஓடாமல் இருக்க, அவர்களின் கால் எலும்புகளை முறித்துள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு முன் சைக்கிள் செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

பய்யாலால் குடும்பத்தினர், மதம் மாறினால் தலித் என்பதால் சந்திக்க நேர்ந்த அவமானத்தையும் அவலத்தையும் பின்னுக்கு தள்ள முடியும் என்ற நம்பிக்கையில் பௌத்த மதத்தைத் தழுவியவர்கள். பிரியங்கா புத்திசாலி மாணவியாகத் திகழ்ந்து, பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர். பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த அவரது அண்ணன் ரோஷன் அக்கிராமத்திலேயே அதிகம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அண்ணனான சுதீர் கண் பார்வையற்றவர். அவரையும் சாதி வெறி பிடித்த பாவிகள் விட்டு வைக்கவில்லை !

பய்யாலால் குடும்பத்தினர் தாக்கப்படக் கூடும் என்ற பயத்தில், அவர்களை கிராமத்தை விட்டு சென்று விடுமாறு எச்சரிக்க, கஜ்பியே (இவரது உறவினரான சித்தார்த், குன்பி சாதியினரால் ஒரு முறை கடுமையாகத் தாக்கப்பட்டபோது, காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சிக் கையொப்பம் இட்டிருந்தனர் !) என்ற குடும்ப நண்பர், சம்பவ தினத்தன்று கயர்லாஞ்சிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா தனது கைத்தொலைபேசியில் அவரை உதவிக்கு அழைத்துள்ளது தெரிய வந்தைருக்கிறது. அவர் வருவதற்குள் எல்லாமே முடிந்து விட்டது !

சம்பவ தினத்தன்று (29 செப்டம்பர் 2006) மாலையில், மின்சாரம் இல்லாத அவர்களது சிறுகுடிசையில், பிள்ளைகள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். தாயார் சுரேகா உணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, குன்பி அரக்கர்கள் அடங்கிய வெறிக்கூட்டத்திற்கு தலைமை ஏற்று இந்த படுபாதக செயல் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தவன் பிரபாகர் மண்டேலிகர் என்பவன். அவனோடு செர்ந்து, தற்சமயம் கைது செய்யப்பட்டிருக்கும் 42 பேரும், தாங்கள் சம்பவம் நடந்த போது கிராமத்திலேயே இல்லை என்று சாதிக்கின்றனர். ஊரில் உள்ள மற்ற இரு தலித் குடும்பத்தினரும் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்ல மரண பயத்தில் மறுத்து வருகின்றனர் என்பது வேதனையான விஷயம். அரசு இயந்திரமும், காவல் துறையும், போஸ்ட்மார்ட்டம் செய்த அரசு டாக்டர்களும் குற்றவாளிகளுக்கு சாதகமாக இயங்கும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் ???

தற்போது பய்யாலால் மட்டுமே நடந்த அராஜகத்திற்கு சாட்சியாக உள்ளார். ஆனால், அவர் முதல் குற்றவாளி என்று கை காட்டிய கிராமத்துத் தலைவரான உபஸ்ராவ் கன்டாடே இதுவரை கைது செய்யப்படாதது போலீசார் யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆள் அரவமிக்க பொது இடத்தில் நடந்ததை கிராமத்தில் உள்ள ஒருவரும் பார்க்கவில்லை என்று சாதிப்பது விந்தையிலும் விந்தை ! முதல் மருத்துவ அறிக்கை கொலை செய்யப்பட்ட நால்வரும் கபாலத்தினுள் ஏற்பட்ட ரத்தப் பெருக்கினாலும் (intracranial haemorrhage), நரம்பு மண்டல அதிர்ச்சியாலும் (neurogenic shock) இறந்தனர் என்று கூறுகிறது. வன்புணர்வு பற்றி அறிக்கை எதுவும் பேசவில்லை ! போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் தற்சமயம் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர கிராமங்களிலும், அவ்வரசின் கிராம நிர்வாகத்திலும் புரையோடிப் போயிருக்கும் சாதீய உணர்வே, விசாரணையின் மெத்தனத்திற்கும், போக்கிற்கும் காரணம் என்பது நிதர்சனம் ! முதல் தகவல் அறிக்கை (FIR) சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குப் பின் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது ! அரசு உயர்மட்டத்திலிருந்து வரும் பிரஷர், பய்யாலாலுக்கு உரிய நீதி வழங்கப்படுவதை கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது ! ஓய்வு பெற்ற நீதிபதி கோல்ஸே பாட்டில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, தன் முழு அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தற்போது, வழக்கு விசாரணை CBI வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இப்பதிவின் முடிவில் உள்ள "தொடர்புடைய சுட்டி"யை கிளிக் செய்து, கயர்லாஞ்சியில் ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட வன்முறை பற்றிய சில படங்களை பார்க்கலாம். இளகிய மனமுடையவர்கள் தயவு செய்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள் !

எ.அ.பாலா

### 264 ###

Tuesday, November 28, 2006

கிரிக்கெட் கூத்துகள்

தென்னாபிரிக்காவில் இந்திய அணி தழுவிய 2 தோல்விகளைத் தொடர்ந்து அரங்கேறியுள்ள கூத்துகளை பார்க்கலாம்.

1. BCCI-யின் தலைவரான பவார், தேர்வுக் குழுவின் தலைவரான வெங்க்சார்க்கரை தென்னாபிரிக்காவுக்கு விரைந்து சென்று, இந்திய மக்களின் அதிருப்தியையும், மன வருத்தத்தையும் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். இதை தொலைபேசியிலேயே சொல்லி விடலாம் என்ற விஷயத்தை அமைச்சரிடம் யாரும் தெரிவிக்கவில்லை போலிருக்கிறது :)

2. BCCI-யின் உப தலைவரான சஷாங்க் மனோகர், இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஆடிய விதத்தை பார்க்கும்போது, வீரர்களுக்கு ஒரு பைசா தரக் கூடாது என்றும், கிரிக்கெட் வாரியத்தை குற்றம் சொல்வது தவறு என்றும் காரசாரமாகப் பேசியுள்ளார் ! performance-க்கு ஏற்றபடி ஊதியம் வழங்குவது, கிரிக்கெட் வீரர்கள் பொறுப்பாக விளையாட வழி வகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

3. லோக் சபாவில் எம்.பி க்கள் எகிறி எகிறி குதித்ததைப் பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன் ! அதற்கு, தைரியமாக இருவர் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சஷாங்க் மனோகர், "கிரிக்கெட் தொடர்புடைய விஷயங்கள் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை போலிருக்கிறது" என்றும், கிரெக் சாப்பல், "நான் ஆச்சரியப்படவில்லை ! இம்மாதிரி என்னை குறை கூறுவதற்குத் தான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது" என்றும் இரண்டு போடாக போட்டார்கள் ! அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "எம்.பி க்களின் பணி என்ன என்று யாரும் எங்களுக்கு லெக்சர் தர வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். கடுப்பான நமது மேதகு உறுப்பினர்கள், சாப்பல் மீது உரிமை மீறல் தீர்மானம் கூட கொண்டு வர முடியும் என்று பயம் காட்டியுள்ளார்கள். ஒன்று புரியவில்லை. இவர்கள் சாப்பலைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் இவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது ! நாட்டை கட்டிக் காப்பவர்களிடமே சகிப்புத் தன்மை இல்லையென்றால், எப்படி பாமர மக்களிடம் எதிர்பார்க்க முடியும் ? அவர்கள் தொடப்பம், செருப்பு, முட்டை ஆகியவற்றை நாடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ;-)

4. கல்கத்தா ரசிக வெறியர்கள், கிரெக் சாப்பலின் உருவ பொம்மையை எரித்தும், சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும்மென்று கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் ! இதில் வியப்பொன்றும் இல்லை எனலாம் ! அலகாபாத்தில் உள்ள மகமத் கை·பின் இல்லம் தாக்கப்பட்டுள்ளது. சந்தடி சாக்கில், கம்யூனிஸ்ட்கள் சவுரவ் கங்குலியை அணியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குளிர் காய்ந்துள்ளனர். அவர்கள் குணம் தெரிந்தது தானே :)

5. கேப்டன் டிராவிட் காயமடைந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் ஆட இயலாத சூழலில், VVS லஷ்மண் தென்னாபிரிக்கா செல்ல இருக்கிறார். ஒரு மாதத்திற்கு முன்பு வெங்க்சார்க்கர், லஷ்மணை ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் சேர்க்காததற்கு, அவர் Fitness (இல்லாமல் இருப்பது) தான் காரணம் என்று கூறியது ஏனோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது ;)))

இந்த கூத்துகளுக்கு நடுவில், சரத் பவாரும் டிராவிட்டும் நடந்து கொள்ளும் விதம் பாராட்டத் தக்கது. பவார், கிரெக் சாப்பலை நீக்குவதோ, அணியின் செயல்பாட்டில் தலையிடுவதோ சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அமைதியின் சொரூபமான நமது கேப்டன் டிராவிட், "என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி நான் கவலைப்பட இயலாது (அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் அணி வீரர்களே சொதப்புகிறார்கள் என்பது வேறு விஷயம்:)) யாரையும், கிரிக்கெட் பற்றி பேசாமல் இருக்கும்படி நான் கூற முடியாது. விமர்சிப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருப்பது போலவே, அதற்கு பதில் கூறாமல் இருக்க எனக்கும் உரிமையுள்ளது" என்று மெச்சூரிட்டி தெறிக்கப் பேசியுள்ளார் !!!

As Groucho Marx once said, "He may talk like an idiot. He may look like an idiot. But, don't let that fool you. He really is an idiot !"
நான் இங்கு டிராவிட்டைப் பற்றிப் பேசவில்லை, என்னைப் பற்றியும் அல்ல :)

எ.அ.பாலா

*** 263 ***

Saturday, November 25, 2006

மனதை உறைய வைக்கும் பயங்கரம் - தலித்துகள் மீது

ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட, அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த அராஜக வன்முறை குறித்து குமுதத்தில் வாசித்தேன். மனதை மிகவும் பாதித்தது !

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கயர் லாஞ்சி. அங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பய்யாலால் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கௌரவத்துடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பெரும்பான்மையாக இருந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த கயவர்கள் அக்குடும்பத்தை பல விதங்களிலும் கொடுமைக்கு உட்படுத்தி வந்தார்கள். பய்யாலாலுக்கு ஆதரவாக சித்தார்த் என்பவர் உதவி செய்ய , அந்த நபர் ஒரு நாள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அப்போது விதைக்கப்பட்டது, அக்குடும்பத்தினர் சந்திக்கவிருந்த பயங்கரத்தின் விதை !

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான் வன்கொடுமையின் உச்சம் !! பய்யாலால் கண் முன்னே அவருடைய மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களை ஊரைச் சேர்ந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த 'தெரு நாய்கள்' தெருவில் இழுத்துச் சென்று, நிர்வாணமாக்கி பயங்கரமாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அண்ணனையும், தங்கையையும் எல்லார் முன்பும் உடலுறவு கொள்ளச் சொல்லி நிர்பந்தம் செய்திருக்கிறார்கள் ! அவர்கள் மறுக்க, பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் குச்சிகளால் துளைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

பிறகு, ஏறக்குறைய அந்த கிராமத்திலிருந்த அத்தனை 'உயர்த்தப்பட்ட' சாதி ஆண் மிருகங்களும் தாயையும், மகளையும் பகிரங்கமாக வன்புணர்ச்சி செய்து, நால்வரையும் அடித்தே கொன்று போட்டார்கள். உடல்களை ஒரு கால்வாயில் போட்டு விட்டு ஊரே கை கழுவியிருக்கிறது ! இத்தனை கொடூரங்களும் காட்டுமிராண்டி கூட்டத்தின் வெறியாட்டத்திற்கு குலை நடுங்கிப் போய் ஓளிந்திருந்த பய்யாலாலின் கண் முன்னே நடந்திருக்கிறது. காவல் துறையும் பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.

ஊடகங்கள் மெதுவாக விழித்துக் கொண்டு இந்த அநியாய, அக்கிரம சம்பவத்தை ரிப்போர்ட் செய்த பிறகு, அங்கு பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. ஆனாலும், பல குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள். இன்று தனிமரமாய் நிற்கும் பரிதாபத்துக்குரிய பய்யாலால், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நம் நாட்டில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறிக்கு உதாரணமாய் கதறுகிறார் !

கீழ்வெண்மணிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. உலக அரங்கில் நம்மை தலை குனிய வைத்திருக்கும் சம்பவம் இது.

நன்றி: குமுதம்

டெயில் பீஸ்: இது போன்ற, தாழ்த்தப்பட்டவர் மீதான, தினம் ஓர் அராஜக வன்கொடுமை, நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த வண்ணம் இருக்கிறது ! நாமும் செய்தியை வாசித்து விட்டு, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், சாதி/மதம் குறித்து தினம் இணையத்தில், பயனில்லாத வகையில், தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான விஷயம் ! தீண்டாமை நிலவும் ஏதாவது ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படவும், தாழ்த்தப்பட்டவர் நல்வாழ்வு பெறவும், கூட்டாக நாம் பங்களிக்க முடியும் என்று தோன்றுகிறது.. எவ்வாறு செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள் !!!

எ.அ. பாலா

*** 262 ***

Friday, November 24, 2006

இந்திய கிரிக்கெட் அணியின் அடிமைத் தன்னிலை !

டர்பனில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியை கண்டு "களித்த" இந்திய வம்சாவழி ரசிகர் ஒருவர் "இந்திய அணி இயங்கிய விதமும், அதன் ஆட்டமும், அடிமைகள் தங்கள் முதலாளிகளுக்கு தலை வணங்கி நடப்பது போலவே இருந்தது" என்று படு காட்டமாக விமர்சித்தார் ! மற்றொரு ரசிகை, "நமது வீரர்கள், பலமற்ற சாதுவான கோழைச் சிறுநாய்கள் (sheepish lapdogs) போல், தங்களை தென்னாபிரிக்க அணி மிரட்டிப் பணிய வைக்க ஏதுவாக நடந்து கொண்டனர்" என்று கடுப்பியிருக்கிறார் !

கொழுவி பாணியில் சொல்ல வேண்டுமானால், "என்னை செருப்பால் அடியுங்கள், ஏனெனில் நான் புதனன்று இந்தியா-தென்னாபிரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்தேன்!" என்று தான் அடியேன் கூறுவேன் :)

டர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா சந்தித்த அவலமான தோல்வியை டிவியில் காணும் அவலம் எனக்கு ஏற்பட்டது துரதிருஷ்டமே :( முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக அணி, ஜேக் காலிஸ் அடித்த சதத்தின் வலிமையால், 248 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் நன்றாக பந்து வீசிய அகர்கார், தனது கடைசி இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து, எதிரணிக்கு தன்னாலான தொண்டாற்றினார் !

வெற்றி பெற 249 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியா, 62-2 என்ற ஸ்கோர் வரை, ஓரளவு நம்பிக்கை தரும் வகையில் ஆடிக் கொண்டிருந்தது. முக்கியமாக, சச்சின் தனது பழைய பாணியில், கவனமும், aggression-ம் கலந்து சிறப்பாகவும், டிராவிட் 'சுவர்' போலவும், ஆடிக் கொண்டிருந்தனர். அடுத்த 3 பந்துகளில் ஆட்டம் திசை மாறியது. சச்சினும், டிராவிட்டும் இரண்டு அருமையான பந்துகளுக்கு ஆட்டமிழந்தனர். ஸ்கோர் 62-4.

தென்னாபிரிக்க அணி லேசான ரத்த வாடையை முகர்ந்து விட்டது ! அதற்குப்பின், பெவிலியனை நோக்கிய (சவ) ஊர்வலம் தொடங்கியது ! தென்னாபிரிக்காவின் நெஞ்சளவு மற்றும் வெளி நோக்கி வீசப்பட்ட வேகப்பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், திருவாளர்கள் சுரேஷ் ரயினா (நயினாவுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தாகி விட்டது!), பீம பலம் வாய்ந்த தோனி, மோ(சோ)ங்கியா மற்றும் நமது பந்து வீச்சாளர்கள் கிடுகிடுவென தங்கள் விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர் !

ஒரு கட்டத்தில், இந்திய அணி 28 பந்துகளில், 2 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்ததை வைத்துப் பார்க்கும்போது, நமது அணி வீரர்கள் எவ்வளவு மன உறுதி, சூடு, சொரணை மிக்கவர்கள் என்பதை நாம் கண்டு கொள்ளலாம் ! அணியில் மூன்று வீரர்களே ஈரிலக்க ரன்கள் (சச்சின் 35 ரன்கள்) எடுத்தனர். இந்தியா 91 ரன்களுக்கு (29.1 ஓவர்களில்) சுருண்டது, வெட்கக்கேடு போல் தோன்றினாலும், பூரண சரணாகதித் தத்துவத்தை எனக்கு புரிய வைத்ததற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் !

முன்பு நான் 2002-இல், இந்தியா-நியூஸிலாந்து போட்டிகளுக்குப் பின் ரீடி·ப் இணைய தளத்தில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது, நான்கு வருடங்களுக்குப் பின்னும் மாறாமல் இருப்பது வேதனையான விஷயம். அக்கடிததில்,"Losing is a part of every sport, but the manner in which our "star" (sponsor created status for many in our team !) studded team lost to a lowly NZ team was very mortifying, to say the least, to our National Spirit." என்று கூறியிருந்தேன். நானும் திருந்தாமல், இன்னும் நம்பிக்கையோடு இந்தியா ஆடும் கிரிக்கெட் ஆட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பது இன்னொரு வேதனையான விஷயம் !

இன்று வரையில், சச்சின், டிராவிட் தவிர்த்து, வேகப்பந்து வீச்சுக்கு உதவும் bouncy ஆடுகளங்களில் தைரியமாக நின்று திறனுடன் விளையாட வல்ல வீரர்கள் உருவாகவில்லை என்பதற்குக் காரணம், இந்தியாவில் காணப்படும் பயனற்ற, Batsmen's Paradise என்றழைக்க வல்ல ஆடுகளங்களே என்பதை அனைவரும் அறிந்திருந்தும், பணத்தில் கொழிக்கும், அரசியல் வகை குடுமிப்பிடி சண்டைகளுக்கு பேர் போன, கேடு கெட்ட BCCI, நாடு முழுதும் நல்ல ஆடுகளங்களை அமைக்க, உருப்படியாக எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. கோபத்தில், மேலே உள்ளது பெரிய வாக்கியமாக அமைந்து விட்டது !

இத்தோல்வியின் எதிரொலியை பாராளுமன்றத்திலும் கேட்க முடிந்தது ! சில MP-க்கள் இந்தியத் தோல்வி ஏற்படுத்திய மன வருத்தத்திலும், கோபத்திலும், க்ரெக் சாப்பலை பயிற்சியாளர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று ஆவேசப்பட்டனர். சந்தித்து வரும் தொடர் தோல்விகளிலிருந்து இந்திய அணி விடுபடவேண்டி, BCCI-யின் தலைவரான சரத் பவார் என்னென்ன முயற்சிகள் எடுக்கவுள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று பிஜேபியின் மூத்த தலைவரான விஜய்குமார் மல்ஹோத்ரா கேட்டுக் கொண்டார் ! ரொம்ப முக்கியமான நாட்டுப் பிரச்சினை இல்லையா இது ??? அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தரகர்கள் தலையீடு இல்லாமல் இருந்தாலே போதும், இந்திய கிரிக்கெட், சண்டை சச்சரவில்லாமல், முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு வசதியாக இருக்கும்.

இந்த தோல்விக்குப் பின்னும் டிராவிட் தனது அணி வீரர்களைக் காய்ச்சாமல், அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் ஒரு பேட்டியில் பேசியிருப்பதை பாராட்டலாம். மனச்சோர்வு அடைவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், இம்மாதிரி ஆடுகளங்களில் நின்று ஆடுவதற்கு அவசியமான உத்திகளை அணி வீரர்கள் கை கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார். ஞாயிற்றுக் கிழமை 'நம்ம' பயங்க என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம், என்ன இருந்தாலும், வாழ்க்கையில நம்மளுக்கும் நம்பிக்கை வேணும் இல்லயா :)))

என்றென்றும் அன்புடன்
பாலா

### 261 ***

Thursday, November 23, 2006

ஸ்ரீரங்கத்தில் ஈ.வே.ரா வுக்கு சிலை !

பெரியாரின் முழு உருவச்சிலை ஸ்ரீரங்கம் கோயில் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே, பல இந்து இயக்கங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில், அமைக்கப்படவுள்ளது. இச்சிலை அமைப்பதற்கான தீர்மானம், 1973-இல் ஸ்ரீரங்கம் முனிசிபல் கவுன்சில் தலைவரான வெங்கடேஸ்வர தீக்ஷிதர் தலைமையில் நிறைவேற்றப்பட்டு, ஓர் அரசு ஆணை வாயிலாக 144 சதுர அடி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே ஒதுக்கப்பட்டது. பல வருடங்கள் விஷயம் கிடப்பில் இருந்தது. இதைத் தொடர்ந்து, தி.க தலைவர் வீரமணி, டிசம்பர் 1996-இல், சிலைப் பணிக்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், இந்து இயக்கங்களின் தொடர் எதிர்ப்பால், நிலத்தைத் தோண்டி சிலைக்கு அடித்தளம் அமைக்கும் பணி மே-2006இல் தடைப்பட்டது.

கடந்த சனிக்கிழமை, ஸ்ரீரங்கம் ஊராட்சி தி.கவினர், வீரமணியுடன் ஆலோசனை செய்து சிலையை நிறுவும் பணியைத் தொடங்கினர். ஒரு தற்காலிக மேடையமைத்து ஈ.வெ.ரா சிலையை அதன் மேல் வைத்துள்ளனர். சிலைக்கான நிரந்தர அடித்தளமும், மேடையும் இன்னும் அமைக்கப்படவில்லை ! திராவிட கழகத்தினர், சிலை அமைப்பதற்கான அனைத்துப் பணிகளும் ஈ.வெ.ரா வின் நினைவு தினமான டிசம்பர் 24க்குள் முடிக்கப்பட்டு, வீரமணி சிலையை திறந்து வைப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பி.ஜே.பி-யின் மாநில பணிக்குழு உறுப்பினரான ராமகிருஷ்ணன், தீவிர நாத்திகரான ஈ.வெ.ராவின் சிலையை, உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்து ராஜகோபுரம் முன்பு நிறுவதின் மூலம், ஆத்திக இந்துக்களின் நம்பிக்கையை திகவினர் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், " 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் ஆண்டு முழுதும் பல உத்சவங்கள் நடைபெறுகின்றன. இறை நம்பிக்கையாளர்களை மூடர்கள் என்று பேசிய ஈ.வே.ராவின் சிலையை இங்கு நிறுவதின் மூலம், திகவினர் ஆத்திகர்களின் உள்ளத்தை புண்படுத்தி விட்டனர்" என்று கூறியுள்ளார். சிலையை வேறு இடத்தில் அமைப்பதை இந்துக்கள் எதிர்க்கவில்லை (!) என்றும் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தியுள்ளார்.

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெயில் பீஸ்: அரசு அனுமதி தந்து, ஒருவரின் சிலையை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரிடத்தில் அமைப்பது பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஈ.வெ.ரா சிலையை குறிப்பிட்ட இடத்தில் வைப்பதால், ஸ்ரீரங்கநாதருக்கு எந்த களங்கமும் ஏற்படவும் போவதில்லை ! ஆத்திக அன்பர்கள் நம்மாழ்வாரின் கீழ்க்கண்ட இரு பாசுரங்களை நினைவில் கொண்டால், இவ்விஷயத்தை ஒரு பிரச்சினையாகவே எண்ண வாய்ப்பில்லை !
******************************
அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்

அவரவர் விதிவழி அடையநின்றனரே.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

****************************
சில வாரங்களுக்கு முன் ஈ.வெ.ரா சிலைக்கு சந்தனம் பூசி, மாலையிட்டு, பூஜை போட்டு அவருக்கு களங்கம் உண்டு பண்ணி விட்டார்கள் என்று ஒரு பிரச்சினை கிளம்பியது போல, மறுபடியும் இன்னொரு பிரச்சினை எழாமல் இருக்க வேண்டும். என்ன, அடுத்த தடவை, சிலை வைணவக் கோயிலுக்கு அருகில் இருப்பதால், விஷமிகள் சந்தனத்திற்கு பதிலாக நாமத்தை குழைத்துப் போட்டு, கலாட்டா செய்யாத வகையில், நிரந்தரமாக ஒரு காவலரை, சிலையின் பாதுகாப்புக்கு நியமித்தால் நல்லது ! அதனால், ஒரு சாரார் மீது குற்றம் சாட்டி சண்டை போடும் அவசியமும் ஏற்படாது !!!

எ.அ.பாலா

*** 260 ***

Saturday, November 18, 2006

மருத்துவ மாணவி கௌசல்யாவை சந்தித்தேன்

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!
கௌசல்யாவுக்கு கல்வி உதவி குறித்த எனது முந்தைய பதிவு உங்கள் பார்வைக்கு:

முதற்கண், கௌசல்யாவின் கல்விக்கு உதவித் தொகை வழங்கிய நண்பர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு வழியாக, முதலாண்டு தேர்வு முடிந்து, ஒரு நீண்ட விடுமுறைக்குப் பின், தனது இரண்டாம் வருட மருத்துவப் படிப்பைத் தொடர, சொந்த ஊரான அந்தியூரிலிருந்து கௌசல்யா சென்ற வாரம் சென்னை வந்து சேர்ந்தார். கடந்த 2 மாதங்களில் பல முறை அவரிடம் தொலைபேசியிருக்கிறேன். சென்னை வந்தவுடன் என்னை தொடர்பு கொண்டார்.

இன்று ஸ்டான்லி கல்லூரி விடுதிக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசி விட்டு, நண்பர்களிடம் திரட்டிய கல்வி நிதியிலிருந்து அவருக்கு வேண்டிய உதவித் தொகையை அளிக்கலாம் என்ற முடிவுடன் எனது நண்பன் சங்கருடன் கிளம்பினேன். சென்ற வருடம் கௌசல்யாவை டெக்கான் குரோனிகள் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றபோது உடன் வந்த பெருமழை, இன்றும் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது ! ஆனால், இது சிறுமழையே :)

கௌசல்யாவை சந்தித்துப் பேசினேன். சென்ற வருடம் பார்த்ததை விட, சற்று தைரியமாகத் தோன்றினார். ஒரு வருட நகர (விடுதி) வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் வருடத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் பற்றி வினவினேன். கூடப் படிக்கும் மாணவ/மாணவியர் பலரும் (இவரைப் போலவே) திறமைசாலிகள் என்பதால், competition தீவிரமாக இருப்பதாக அவர் கூறியது, பலரும் அறிந்தது தானே! பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ஒரு கிராமத்தில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற கௌசல்யா, முயற்சி எடுத்துப் படித்து, 70 மதிப்பெண்கள் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது என்பது என் கருத்து. முதல் வருட மருத்துவப் படிப்பில் அவர் பயின்ற பாடங்கள், Anatomy, physiology மற்றும் Bio-chemistry ஆகியவை.

அவர் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற ஆவன செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரது உயர் கல்விக்கு பல நல்ல உள்ளங்கள் மனமுவந்து உதவி செய்திருப்பதை எடுத்துக் கூறி, இரண்டாமாண்டில் இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என்று உங்கள் சார்பில் அறிவுரை கூறினேன் (நான் ஓர் அட்வைஸ் அண்ணாசாமி என்பது வேறு விஷயம்:)) மீண்டும், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல !

கௌசல்யா நன்றாகப் படித்து வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும், வருவார் என்ற திடமான நம்பிக்கையும் உள்ளது. அவ்வப்போது தாய் தந்தையற்ற அவரை சந்தித்துப் பேசி ஊக்கமளித்தலும் அவசியம் என்று தோன்றுகிறது, செய்வேன் ! கௌசல்யாவின் கல்விக்கு வேண்டி இந்த வருடம் திரட்டப்பட்ட மொத்த உதவித் தொகை 105559 (பழைய பாக்கியையும் சேர்த்து). வரவுக் கணக்கை, உதவி செய்த நண்பர்களூக்கு ஏற்கனவே மடல் வழி அனுப்பி விட்டேன். இந்த நேரம், தமிழ்மணத்திற்கும், திண்ணைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

உதவிய நண்பர்கள் விவரம் பின் வருமாறு:
செந்தில் குமரன், ஹரிஹரன், மஞ்சூர் ராசா, டோண்டு, கணேஷ் (சேலம்) alias S.V.Ganesh, H.ரங்கராஜன், குழலி, சந்தோஷ், துளசி, முகமூடி, மோகன் அண்ணாமலை, அபுல் அப்சல், ராமச்சந்திரன், ராஜா.ரங்கா, ஸ்ரீகாந்த் மீனாட்சி, வெட்டிப்பயல் என்கிற பாலாஜி.

இது தவிர, பொதுவில் பெயர் வெளியிட அனுமதிக்காத 12 நண்பர்கள் மற்றும் ஓர் இஸ்லாமியச் சகோதரர்.

ஒவ்வொரு ஆண்டும், கௌசல்யாவுக்கான டியூஷன் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தி விடும். எனவே, விடுதிக்கான முழு ஆண்டு கட்டணமான ரூ.18000-க்கு (இத்தொகையிலிருந்து ஒவ்வொரு மாதத்திற்கான செலவை விடுதி நிர்வாகம் கழித்துக் கொள்ளும்) ஸ்டான்லி மாணவிகள் விடுதிக்கான வார்டன் பெயருக்கு ஒரு காசோலையும், கௌசல்யாவின் இதரச் செலவுகளுக்கு (புத்தகங்கள், உடை ...) அவர் பெயரில் ரூ.10000-க்கான காசோலையும் உங்கள் சார்பில் வழங்கினேன். "நீங்கள் கொடுத்ததே இந்த வருடத்திற்குப் போதுமானது சார்" என்று அப்பெண் மனநிறைவோடு கூறினாலும், ஏதேனும் தேவையிருந்தால் தயங்காமல் கேட்குமாறும், நன்றாகப் படிப்பது குறித்து மட்டும் யோசிக்குமாறும் கௌசல்யாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

திரட்டிய தொகையில், வைப்பு நிதியாக (fixed deposit) வங்கியில் உள்ள ரூ.40000 மற்றும் கௌசல்யாவுக்கு அளித்த ரூ.28000 போக மீதமுள்ள தொகையில் இன்னும் சில ஏழை மாணவ/மாணவிகளுக்கு (இவர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில் நானும், ராம்கியும் சிலரைப் பற்றி விசாரித்து விட்டோம், இன்னும் சிலர் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது) உங்கள் அனுமதியுடன் உதவலாம் என்பது எங்கள் எண்ணம். நாம் கூட்டாக உதவி செய்த / செய்யப்போகிற மாணவ/மாணவிகளை ஊக்கப்படுத்தி அவர்கள் நன்றாகப் படிக்கிறார்கள் என்று உறுதி செய்வதும், உதவித் தொகையை உண்மையான தேவை இருப்பவர்களுக்கு பயன்படும் விதத்தில் செலவிடுவதும் எங்கள் கடமை என்று நம்புகிறோம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன். கல்விக்கு உதவும் இம்முயற்சிக்கு தொடர்ந்து நீங்கள் தரும் பேராதரவு தான், எனக்கும், விரைவில் சம்சார சாகரத்தில் நீந்த இருக்கும் 'ரஜினி' ராம்கிக்கும் மிகுந்த ஊக்கத்தையும், உற்சாகத்தையும், மனநிறைவையும் தருகிறது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் உளமார நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் !

என்றென்றும் அன்புடன்
பாலா

***** 259 ******

Sunday, November 12, 2006

திருவாய்மொழிப் பாசுரங்களின் சிறப்பு - TVM1

வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,
செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.


வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசப் பெருமானே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!
*************************

அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீழமர்ந்து புகுந்தேனே.

அலர்மேல் மங்கை எனும் இலக்குமி குடி கொண்டிருக்கும் திருமார்பனே! உன்னை விட்டு பிரியா நிலை வேண்டினேன். வானுலகம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களுக்கு அதிபதியே! என் அரசனே! தேவர்களும், முனிவர்களும் நேசிக்கும் திருவேங்கடம் வாழ் பெருமானே! உன் திருவடியைத் தவிர வேறொரு புகலிடமும் இல்லாத நான், உன்னிடம் தஞ்சமடைந்தேனே!
***********************************

பெருமான் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்ற கேள்விக்கு, நம்மாழ்வார் பதிலாக வழங்கியது போல் உள்ளது இப்பாசுரம்:

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே


அவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும், அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும் இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த பரந்தாமன் இருப்பதால், என்றும் (Eternal) எங்கும் வியாபித்து (all pervading) இருக்கும் நிலை கொண்டவன் அவனே !
********************************

எளிமை தான் நம்மாழ்வரின் வழி:

அற்றது பற்றெனில்
உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில்
அற்றிறை பற்றே

பற்றை ஒழித்தால், ஆன்மா உய்வுறும். உலக பந்தங்கள் அனைத்தையும் விட்டொழித்து, அவ்விறைவனின் திருவடி சேர்க !
******************************

நாராயணன் தான் சகலமும் என்கிறது இப்பாசுரம்:

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே


தேவரும், உலகங்களும், மன்னுயிர்களும் மற்றும் எதுவுமே தோன்றாத காலத்தே, பிரம்மனையும், தேவர்களையும், உலகங்களையும், உயிர்களையும் படைத்தவன் அப்பரந்தாமனே ஆவான். குன்றுகளை ஒத்த அழகிய மாடங்கள் உடைய திருக்குருகூரில் எழுந்தருளியிருக்கும் ஆதிநாதனைத் தவிர வேறெந்த கடவுளரையும் நாட வேண்டியதில்லை !
****************************

இப்பாசுரத்தில், நம்மாழ்வார் கலியுக மாந்தர்க்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறார் !

பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை,
கலியும் கெடும் கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்


கொடிய சாபங்கள் நீங்கி விட்டதால், மகிழ்ச்சி கொள்க ! நரகத்தை ஆளும் யமனுக்கு இங்கே வேலையில்லை ! கடல்வண்ணனான பரந்தாமனின் உறைவிடமான வைகுந்தத்தில் உள்ள பூதகணங்கள், மனித உருவெடுத்து, இப்பூவுலகிற்கு வந்து, தங்கள் நிலை மறந்த பேருவகையில் (ecstasy) அப்பரந்தாமனை போற்றிப் பாடியாடுவதைக் காண்கையில், இக்கலியும், அல்லல்களும் முடிவுறும் என்பதை உணர்க !
*****************************

கீழ்க்கண்ட திருப்பாசுரங்களில் காணப்படும் பக்திப் பேருவகையும், பூரண சரணாகதியும், வாசிப்பவரின் உள்ளத்தை உருக்க வல்லது !

எனதாவியுள் கலந்த* பெருநல்லுதவிக்கைம்மாறு,*
எனதாவி தந்தொழிந்தேன்* இனிமீள்வதென்பது உண்டே,*
எனதாவியாவியும் நீ* பொழிலேழும் உண்ட எந்தாய்,*
எனதாவியார் யான் ஆர்?* தந்த நீ கொண்டாக்கினையே. 2.3.4


என் உயிரில் ஒன்றறக் கலந்து, நீ அருளிச் செய்த அரியதோர் உதவிக்கு பதிலாக என்னுயிரை உனக்குரியது ஆக்கினேன், ஐயனே ! அவ்வாறு என்னுயிரை ஈந்த பின்னர் உன்னிடமிருந்து யான் விலகுவதோ, மீள்வதோ இயலாத காரியம் ஆயிற்றே ! என் ஆன்மாவின் வித்தாக இருப்பவனும் நீயே ! பிரளய காலத்தில், ஏழு வகைப்பட்ட உலகங்களைக் காக்க வேண்டி அவற்றை உன் திருவயிற்றில் வைத்து ரட்சித்த உனக்கு, நீ கொடுத்த என்னுயிரை உனக்கே திருப்பித் தர நான் யார் ? கொடுத்த என் சுவாமி நீயே அதை உனதாக்கிக் கொண்டு என்னை உய்வுற வைத்தாய் !
******************

தானோர் உருவே தனிவித்தாய்த்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றுமாய்த்
தானோர் பெருநீர் தன்னுள்ளே
தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மாமாயன்
வைகுந்தன் எம் பெருமானே


ஆதிபிரானே நாம் காணும் உணரும் அனைத்துக்கும் முதற்காரணனாய், துணைக்காரணனாய், நிமித்த காரணனாய் திகழ்கிறான். தானே பிரம்மன், ஈசன், இந்திரன் ஆகிய மூவராகி, அதன் மூலம் தேவர்களையும், முனிவர்களையும், மற்றும் மனிதர்களையும், விலங்குகளையும், ஏனைய அசையும் மற்றும் அசையாப் பொருட்களையும் படைப்பிக்க வேண்டி ஓர் பிரளய வெள்ளத்தை உருவாக்கி, அதில் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவன் ! நித்யசூரிகளின் தலைவனான, எம்பெருமான் உணர்வதற்கரிய, அதிசயமான குணங்களை உடையவன் ! அப்பெருமானே பேரின்ப வீடான பரமபதத்தின் நாயகனும் ஆவான் !
******************

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்
மின்னும் சுடர்மலைக்குக் கண், பாதம், கை கமலம்
மன்னும் முழுஏழ் உலகும் வயிற்றின் உள
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இலையே


என்னுயிரில் கலந்து என்னை ஆட்கொண்ட எம்பெருமான் பேரொளி வீசும் பெருமலை போன்றவன் ! அவனது அழகிய சிவந்த உதடுகள், திருக்கண்கள், திருக்கைகள் மற்றும் திருவடிகள் யாவும் தாமரை மலர் போன்றவையே ! ஏழு உலகங்களையும் அவன் திருவயிற்றில் வைத்து ரட்சித்து, அவனே யாதுமாகி நிற்பதால், அவனுள் கலவாத, அவனுக்கு அப்பாற்பட்ட, பொருள் என்பதே கிடையாது !
**********************
என்றென்றும் அன்புடன்
பாலா

### 258 ###

Saturday, November 11, 2006

ஈ.வெ.ரா ஏற்படுத்திய தாக்கம் !

பெரியார் குறித்து சமீபத்தில் (டோண்டுவின் "சமீபத்தில்" அல்ல:)) வாசித்தறிந்த இரண்டு நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துடன்:

நிகழ்வு ஒன்று:
----------------------
கஸ்தூரி ஸ்ரீநிவாஸன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஹிந்து நாளிதழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு முறை, மதச்சடங்குகளில் நம்பிக்கை இல்லாத அவரது மாமா ஒருவர், கஸ்தூரி அவர்களின் பால்ய வயதில், அவரை கோயமுத்தூரில் பெரியார் கலந்து கொண்ட அரசியல் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

பல வருடங்களுக்கு பின் அப்பேச்சை நினைவு கூர்ந்த கஸ்தூரி, "பெரியார் ஒரு திறமையான பேச்சாளர், தன் வாதத்திறமையால் கேட்பவரை கட்டிப் போடுவதிலும், சிந்திக்க வைப்பதிலும் வல்லவர் ! அன்று, பெரியார், 'கடவுள் என்ற ஒருவர் உண்மையில் இருந்தால், மின்சாரத்தையும் வானொலியையும் கண்டுபிடித்த மனிதன், இந்நேரம் அவரைக் கண்டு பிடித்திருப்பான் ! கடவுள் என்று எதுவும் இல்லை ! பார்ப்பனர் சக மனிதரை தமக்குக் கீழேயே வைத்திருக்கும் உபாயமாக, கடவுள் என்ற மூட நம்பிக்கையை கண்டு பிடித்தனர் ! நான் கூறுவது அக்கிரமமானது என்றால், அவர்கள் எனக்கு சாபம் தரட்டும். ஆனால், அச்சாபம் என்னை ஒன்றும் செய்ய முடியாது, ஏனெனில், நான் எதன் மேலும் குருட்டு நம்பிக்கை வைப்பது இல்லை' என்று முழங்கியவர், அதன் தொடர்ச்சியாக, 'என்னுடைய இந்தச் சவாலை இங்கிருக்கும் நாமம் போட்ட மடையன் யாராவது ஏற்கத் தயாரா ?' என்று அறைகூவலிட, நான் (கஸ்தூரி), அன்று நாமம் போட்டிருந்த காரணத்தால், தலையை தாழ்த்திக் கொண்டேன்!" என்று கூறியிருக்கிறார்.

பெரியாரின் அப்பேச்சு ஏற்படுத்திய தாக்கம் குறித்து கஸ்தூரி கூறுகையில், " அன்றிலிருந்து நான் கோயிலுக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன் ! நாமம் அணிவதில்லை ! கடவுள் பெயரால் உபவாசம் இருப்பதில்லை ! கேட்க விருப்பமுள்ளவர் பலரிடமும் பெரியாரின் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கத் தொடங்கினேன். அத்தோடு நில்லாமல், எனது இந்த 'சுய விடுதலை'யை பறைசாற்ற நான் மிகவும் வெறுத்த புலால் உணவை உண்ண ஆரம்பித்தேன் ! அதுவே நான் புதிதாக உணர்ந்த சுதந்திரத்தை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாக எனக்கு புலப்பட்டது" என்றும் சொல்லியுள்ளதை வாசிக்கும்போது, வாசிப்பவர்க்கு ஒரு வித பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்படலாம். அதாவது, கடவுள் நம்பிக்கை மிக்க, ஓர் ஆசாரமான குடும்பத்திலிருந்து வந்த ஒருவர் மீது பெரியாரின் பேச்சு எந்த அளவு தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதை பார்க்கும்போது !!!


நிகழ்வு இரண்டு:
------------------------
பெரியார் அறிஞர் அண்ணாவுடன் ஒரு மேடைப் பேச்சுக்காக, 1944-இல், சிதம்பரம் அருகில் உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார். அவரது அன்றைய மேடை முழக்கத்திற்குப் பின் எதிர்பார்க்க முடியாத வியத்தகு மாற்றங்கள் நிகழ்ந்தன ! மொத்த கிராமமும் நாத்திகத்தைத் தழுவியது ! கிராமத்திலிருந்த வேணுகோபால சுவாமி திருக்கோயில் மூடப்பட்டது. கிராமத்தில் இருந்த விநாயகர் கோயில் இடிக்கப்பட்டு விக்ரகம் ஏரியில் வீசி எறியப்பட்டது ! கிராம மக்கள் அனைத்து மதச்சடங்குகளையும் துறந்தனர் ! இன்று கூட, அக்கிராமத்தில் பார்ப்பனரில்லா சுயமரியாதைத் திருமணங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. அது போலவே, ஈமச் சடங்குகளும் யாரும் செய்வது கிடையாது.

மேற்கூறிய இரண்டும் அசாதாரண நிகழ்வுகளும், ஈ.வெ.ரா என்ற தனி மனிதரின் (இயக்கத்தை இத்துடன் இணைக்க விரும்பவில்லை!) அரசியல் பேச்சுகள் ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியத்தை விளக்குவதற்கு மட்டுமே ! ஈ.வெ.ரா (தனி மனித வாழ்க்கையில் அவரும் பல தவறுகள் செய்திருந்தாலும், சமயங்களில், அவருக்கு அப்போது மக்கள் அளித்த ஆதரவின் போதையில் எல்லை மீறிய அபத்தச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும்!) ஒரு நல்ல சிந்தனையாளர், சிறந்த பேச்சாளர் என்பதற்கு சான்றாக இவ்விரு நிகழ்வுகளையும் பார்க்க முடிகிறது !

எ.அ.பாலா

#$% 257 #$%

Wednesday, November 08, 2006

ஜெ வீட்டில் நுழைந்த மர்ம நபர்

இட்லி வடையாரை முந்திக் கொண்டு ஒரு அரசியல் செய்தியை தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சற்று முன் மக்கள் டிவியில் கேட்ட ஒரு செய்தி:

முன்னாள் முதல்வர் ஜெ வீட்டுக்குள், வாயிலில் இருந்த காவலரை கத்தியை காட்டி மிரட்டி, ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார். பின்னர் அவரை, இன்னும் சிலருடன் சேர்ந்து கொண்டு காவலர் பிடிக்க முயற்சித்தபோது, அதே கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பித்து ஓடி விட்டார் !!! பின்னர், எப்பொழுதும் போல, போலீஸ் வலை வீசித் தேடி அந்த மர்ம நபரை தேடிப் பிடித்து கைது செய்து விட்டனர். அவரை ஆழ்வார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயின் வக்கீல், முன்னாள் முதல்வருக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டதே, இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று நிருபர்களிடம் கூறினார். மேல் விவரங்களை "இட்லி வடை" நாளை தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

எ.அ.பாலா

$$$ 256 $$$

Saturday, November 04, 2006

உயிர் வாழ உதவி வேண்டி !

அன்பு வலைப்பதிவுலக நண்பர்களே,
சற்று சிரமம் பார்க்காமல் இப்பதிவை வாசித்து விடவும் என்ற வேண்டுகோளுடன்:
******************************
தமிழ் வலையுலகில் பதியத் தொடங்கிய காலத்தில் எனக்கு அறிமுகமான அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு, இன்று ஒரு மின்மடல் அனுப்பியிருந்தார். விவரங்களுக்கு அவரது உயிர் வாழ உதவி நாடி பதிவை வாசிக்கவும், இயன்ற அளவில் உதவி செய்யுமாறு உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன்.

அன்பு தற்போது அவ்வளவாக வலை பதிவதில்லை என்பதாலேயே, அவரது வேண்டுகோள் பதிவின் தொடுப்பை தருவதற்காக, இப்பதிவை இடுகிறேன். நன்றி.
****************************
நண்பர் சிங்கை அன்பு அவர்களின் பதிவு:
Sun 5 Nov 2006
உயிர்வாழ உதவி நாடி…
Posted by அன்பு under அனுபவம்/நிகழ்வுகள்

இனிய வலையுலக நண்பர்களுக்கு வணக்கம். நீண்டநாட்களாக வலைப்பதியாமல் இருந்தாலும் ஒரு நல்ல செயலுக்கு உதவும் பொருட்டு இந்த பதிவு.

கடந்த 29 அக்டோபர் 2006 ஞாயிறு - ஹிந்து நாளிதழில் ஸ்வேதா எனும் நான்கு வயது குழந்தை உயிர்வாழ உதவி நாடி ஒரு வேண்டுகோள் வந்திருக்கிறது. ஸ்வேதா, ‘இருதயத்தில் ஓட்டை’ என பொதுவாக அறியப்படும் Atrial Septal Defect(ASD) என்ற பிரச்னையால் அவதியுறுகிறாள். தற்போது சென்னை - ராமச்சந்திரா மருத்துவமனையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அந்த துளையை அடைக்க “திறந்த இருதய அறுவைச்சிகிச்சை” தேவைப்படுகிறதாம். குழந்தைக்கு இருக்கும் இந்தப் பிரச்சினையே நம்மை கலவரப்படுத்தும்போது - சிகிச்சைக்கு ரூபாய் 1,25,000/- என்று குறிப்பிடப்பட்டு பணப்பிரச்னையால் - அறுவைச் சிகிச்சைக்காக இன்னும் நாள் குறிக்கப்படாமல் - ஸ்வேதா சிரமப்படுகிறாள்.

ஸ்வேதாவுக்கு உதவ, இந்தக் குட்டிக்குழந்தை தொடர்ந்து உயிர்வாழ உங்கள் உதவி மிக அவசியம். உங்களால் இயன்ற உதவியை தயவுசெய்து செய்யவும். நல்ல விஷயங்களை இன்றே, இப்பொழுதே செய்ய வேண்டும் என்று கூறுவார்கள் அதனால் நாமும் இப்போதே ஆரம்பிப்போமே.

(வலக்கை - இடக்கை - சொற்றொடரும் ஞாபகம் வந்தாலும்) தற்போது என்னால் இயன்ற தொகையாக ரூ. 10,000 அளிக்க முடிவெடுத்துள்ளேன், நண்பர்களே தொடருங்கள்…

இன்று இது விஷயமாக தொடர்புகொண்டவுடன் ‘என்றென்றும் அன்புடன்’ பாலா, உடனே மருத்துவமனையை தொடர்புகொண்டு மேல்விபரம் பெற்று என்னிடம் தெரிவித்தார். கவுசல்யா-வின் படிப்புக்காக என்று ஆரம்பித்து நமது வலைப்பதிவாளர்களை நற்செயலில் ஈடுபடுத்தியவர். இதிலும் எல்லா உதவியும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். அதனால் உங்களது உறுதிமொழியை இங்கே அளித்தால் எப்படி பணம் அனுப்புவது என்பது பற்றிய மேல் விபரம் உங்களை தொடர்புகொண்டு தெரிவிப்போம். அல்லது நீங்களாகவே நேரடியாக அனுப்ப முடிவுசெய்தாலும் உங்கள் விருப்பபடி செய்யுங்கள். ஆனால் இன்றே… இப்பொழுதே…!

ஸ்வேதா விரைவில் பூரண குணம் அடைய என்னுடைய வேண்டுதலும், பிரார்த்தனைகளும்…

மேல் விபரங்களுக்கு: பாலா (balaji_ammu@yahoo.com), ராம்கி (rajni_ramki@yahoo.com) & அன்பு (lsanbu@gmail.com)

நீங்களே காசோலையாகவோ (Cheque), வரைவோலையகவோ (D.D) அனுப்ப விரும்பினால்,
Sri Ramachandra Hospital, A/c Baby S. Swetha என்ற எடுத்து
Sri Ramachandra Hospital, Porur, Chennai 600 116 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
மிக்க நன்றி.

என்றென்றும் அன்புடன்,
அன்பு

பி.கு: ASD என்னும் இதயதுளையை சரிசெய்ய open heart surgery இல்லாமல் ஒருவித பலூன் (Amplatzer - device closure) மூலமும் அடைக்க இயலும். முதலில் துளை இந்த பலூனால் அடைபட முடியுமளவு சிறியதாக இருக்கவேண்டும் மற்றப்படி இதற்குண்டான செலவு அதிகம். இதில் எந்த நிலையினால் ஸ்வேதாவுக்கு surgery என்று முடிவுசெய்தார்கள் தெரியவில்லை. அதனால் நம்மால் முடிந்த அளவு உதவி செய்து - குழந்தையை குறைந்த வலியுடன் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட வழிசெய்வோம்.

*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா

### 255 ###

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க - 10

இல்லறம் = நல்லறம்
****************

ஒரு தம்பதி சற்று முன் அவர்களுக்கிடையே நடந்தேறியிருந்த சண்டைக்குப் பின்னர், காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவருமே தங்கள் பக்கமே நியாயம் இருப்பதாக பிடிவாதமாக நம்பியதால் வெகு நேரம் ஒருவருடன் ஒருவர் பேசவில்லை. சாலையோரத்தில் புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த சில ஆடுகளையும், பன்றிகளையும் பார்த்த கணவன், மனைவியிடம் நக்கலாக, 'உன் உறவினரோ?' என்று வினவ, மனைவி ஆத்திரப்படாமல், "ஆம், என் மாமியார் குடும்பத்தினர் !" என்றார் :)

கேள்வியின் நாயகனே
*****************

ஒரு கணவர் ஒரு நாளில் ஆண்களை விட இரு மடங்கு சொற்களை பெண்டிர் பேச்சில் உபயோகிப்பதாக ஓர் ஆய்வுக்கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார். உடனே, மனைவி, "அதற்குக் காரணம், பெண்கள் தாங்கள் ஆண்களிடம் ஒரு முறை கூறுவதை, திரும்பவும் கூற வேண்டியிருப்பதே!" என்று சொல்ல, கணவர் வினவினார், " என்ன?"

படைப்பின் ரகசியம்
***************

ஒரு கணவர் தன் மனைவியிடம், "ஒரே சமயத்தில், நீ மிக அழகாகவும், அதி முட்டாளாகவும் காணப்படுவது எப்படி என்பது எனக்குப் புரியவில்லை !" என்றதற்கு பதிலாக, மனைவி, "நான் விளக்குகிறேன் ! கடவுள் என்னை அழகாகப் படைத்தது, நான் உங்களைக் கவரவே, அதே நேரம், என்னை முட்டாளாக ஆக்கியது, நான் உங்களால் கவரப்படுவதற்காகவே !" என்றவுடன், கணவர் கப்சிப் :)

எஅ.பாலா

### 254 ###

Friday, November 03, 2006

திவ்ய தேசம் 6 - திருக்கண்டியூர்

இந்த வைணவ திவ்ய தேசம், திருவையாறிலிருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஹர சாப விமோசனப் பெருமாள், பலிநாதர் மற்றும் பிருகுநாதர் என்றழைக்கப்படும் இக்கோயிலின் மூலவர், நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். உத்சவ மூர்த்தியின் திருநாமம் கமலநாதர். தாயார் கமலவல்லிக்கு தனி சன்னிதி உண்டு. தீர்த்தமும், விமானமும் முறையே கபால மோக்ஷ புஷ்கரிணி மற்றும் கமலாக்ருதி விமானம் என்றும் அறியப்படுகின்றன. நரசிம்மர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோருக்கும் இங்கு தனி சன்னிதிகள் உள்ளன.
Photobucket - Video and Image Hosting
திருக்கரம்பனூரிலும், திருக்குறுங்குடியிலும் கூறப்படும் தல புராணமே, இங்கும் கூறப்படுகிறது. அதாவது, ஒரு முறை, கோபத்தில் சிவன் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுத்தபோது, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதாகவும், மகாலஷ்மியிடமும், பெருமாளிடமும் அவ்வோட்டில் பிட்சை பெற்றதன் மூலம், சிவனுக்கு விமோசனம் கிடைத்ததாகவும், அதனாலேயே தலப்பெருமாள் (சிவபெருமானின் சாபத்தையே நீக்கியதால்!) ஹர சாப விமோசனப் பெருமாள் என்று திருநாமம் பெற்றதாகவும் தலபுராணம் சொல்கிறது.

இவ்வைணவ திருக்கோயில் இரண்டு பிரகாரங்களுடன் விஸ்தாரமாக காணப்படுகிறது. இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகள் கொண்டது. பிரம்மோத்சவம் பங்குனியில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமங்கையாழ்வார் மட்டும், திருக்குறுந்தாண்டகத்தில் ஒரே ஒரு பாசுரத்தில் இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்:
***************************
2050@..
பிண்டியார் மண்டை ஏந்திப் * பிறர்மனை திரிதந்துண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவனூர்,* உலக மேத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம் * கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார்,* உய்யல் அல்லால் * மற்றையார்க்கு உய்யலாமே? (2)

பிரம்மனின் (பிடுங்கப்பட்ட ஐந்தாவது தலையின்) ஓட்டை கையில் ஏந்தி, பிட்சை பெற்று உண்ட சிவபெருமானுக்கு சாப விமோசனம் அளித்தவன், உலகம் போற்றும் திருக்கண்டியூரில் அருள் பாலிக்கிறான். திருவரங்கம், திருமெய்யம், திருக்கடல் மல்லை ஆகிய தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் அப்பிரானை வணங்கி, அவன் திருவடி பற்றி உய்வு பெறுவதை விடுத்து நமக்கு வேறு வழியில்லை !
*****************************

திருவையாறில் அமைந்துள்ள (தேவாரத்தில்) பாடப் பெற்ற பஞ்சனாதீஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தானங்களில் ஒன்றாகவும் திருக்கண்டியூர் போற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே திருக்கண்டியூர் வீரட்ட சிவாலயம், சைவ-வைணவ ஓற்றுமைக்கு சான்றாக அமைந்துள்ளது ! சிவாலயத்தில் பிரம்மனுக்கும், சரஸ்வதி தேவிக்கும் சன்னிதிகள் உள்ளன.

உபரித் தகவல்:
திருக்கண்டியூருக்கு அருகே கல்யாணபுரம் என்ற பசுமையான கிராமத்தில் கல்யாண வேங்கடசுவரர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஒரு காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மராத்திய மன்னனின் துணைவியின் (பெயர்: கல்யாணி) நினைவாகவே கல்யாணபுரம் என்ற பெயரை இக்கிராமம் பெற்றது என்று கூறப்படுகிறது. தியாகப்பிரம்மம் வழிபட்ட புண்ணியத் தலமிது ! வைணவப் பெருந்தகைகள் பலரும் கல்யாணபுரத்தை விசேஷமான தலமாகக் குறிப்பிடுகிறார்கள்.
Photobucket - Video and Image Hosting
பிரம்மாண்ட புராணத்தில், திருக்கண்டியூர் மற்றும் அதனருகில் உள்ள ஸ்ரீநிவாஸ ஷேத்திரம் பற்றிய குறிப்புகள் உள்ளதால், கல்யாணபுரக் கோயில், மிகப் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது ! தாயாருக்கு அலர்மேல் மங்கை என்ற திருநாமம். இங்குள்ள உத்சவ விக்ரகம், முதலில் திருப்பதியில் இருந்து, பின்னர் இங்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பெற்றது.

வருடம் முழுதும், இக்கோயிலில் விழாக்களும், உத்சவங்களும் நடைபெறுகின்றன. சித்திரையில் வசந்த உத்சவமும், அட்சய திருதியையும், வைகாசியில் விசாக உத்சவமும், நவராத்திரியும், தீபாவளியும், கார்த்திகையும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இங்கு தினமும் கருடசேவை நடைபெறுகிறது என்ற தகவல் ஆச்சரியத்தை தரும் !

சுதர்சன ஆழ்வாருக்கும், உடையவர் ராமானுஜருக்கும், பன்னிரு ஆழ்வார்களுக்கும் தனிச் சன்னிதிகள் இங்கு உள்ளன. கண்ணாடி அறையும் உண்டு. சென்ற வருடம் கோயில் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து மகிழ்ந்தனர்.

என்றென்றும் அன்புடன்
பாலா

### 253 ###

Wednesday, November 01, 2006

நியோ பார்ப்பனீயம்

எனது க்ரீமி லேயர் பதிவிற்கு பின்னூட்டமிட நினைத்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி, அது சற்று நீண்டு விட்டதால், மேட்டரை மெயிலில் அனுப்பி, அதை ஒரு பதிவாக இடும்படி வேண்டுகோள் வைத்தார். 'இதில் என்ன இருக்கிறது' என்று அவர் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :) இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!!
*****************

சமீபத்தில் இட ஒதுக்கீடு சம்மந்தமாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இட ஒதுக்கீட்டின் போது அந்தந்த சாதியில் பொருளாதார அடிப்படையில் ஏற்கனவே " வளர்ந்த பிரிவினரை" கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வென்று வரும் போது அந்த சமுதாயங்களில் ஏற்கனவே எந்த சலுகையும் பெறாமல் பின் தங்கிய நிலையில் இருக்கும் மக்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சலுகை அளிக்க வேண்டும் என சொல்லி இருக்கிறது.

உடனே இதை சாதீய தலைவர்களும் மற்றும் சமூக நீதிக் காவலர்களாக தம்மை பாவித்துக் கொண்டவர்களும் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். இதை ஏதோ அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு புறம்பானது போலவும், நீதி மன்றங்களை ஆக்கிரமித்திருக்கும் முன்னேறிய வகுப்பினரின் சதி போலவும் திரித்தும் சித்தரித்தும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.இவர்களது இந்தக் கொந்தளிப்புக்கு என்ன காரணம் ? மேல் ஜாதியினர் ஆண்டாண்டு காலமாக செய்ததை " ஜாதி பிரிவினைகளை உண்டாக்கி சலுகைகளை தாங்களே அனுபவித்ததை " இவர்கள் இன்று தங்களது சாதிகளுக்குள்ளேயே செய்ய முற்பட்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமுதாயத்தில் நிலை உயர ஒவ்வொரு கட்டத்திலும் இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை . பொருளாதார ரீதியாக வளர்ந்த பின்னும் சமூக ரீதியாக வளராத வரை இன்னும் சொல்லப் போனால் அனைவருடனும் சம அந்தஸ்து கிடைக்கும் வரை இடஒதுக்கீடு தேவை என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அதே சமயம் பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப் பட்டோர் என்ற போர்வையில் அதே பிரிவில் உள்ள சில "வளர்ந்த " பிரிவினர் மென் மேலும் சுக போகங்களை தாங்களே பகிர்ந்து கொண்டு அதே சாதியில் இருக்கும் உண்மையிலேயா கீழ்நிலையில் இருப்போருக்கு சலுகை மறைப்பு அல்லது மறுப்பு செய்ய முனைவதும் ஏற்க இயலாதது.

ஜாதீய அடிப்படையில் பிரிவுகள் உண்டாக்கி ஒரு பிரிவினர் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்ததன் பெயர் "பார்ப்பனீயம் " என்றால் இதுவும் ஒருவகையில் " நியோ பார்ப்பனியம் " தான். என் சாதிக்காரன் மலம் அள்ளுகிறான் என கூக்குரலிடும் இவர்கள் யாரும் மலம் அள்ளவும் இல்லை அல்லது இவர்கள் சாதியில் மலம் அள்ளும் எவரையும் முன்னேற்ற முனையவுமில்லை. ஏனெனில் " இவர்கள் வீட்டு மலங்களை அள்ள யாரேனும் வேண்டுமே இந்த நியோ பார்ப்பனர்களுக்கு " இப்படிப் பட்ட" நியோ பார்ப்பனிசத்தையும்" ஒழிப்பதே உண்மையில் பிற்படுத்தப் பட்ட/தாழ்த்தப் பட்ட மக்களுக்கு செய்யும் நன்மை.
**************
நன்றி: கி.அ.அ.அனானி

*** 252 ***

Tuesday, October 31, 2006

கிராமத்து அரட்டை அரசியல் --- 6

கி.அ.அ.அனானி அனுப்பிய தொடரின் 6-வது பாகம்:
****************************

என்னடா மணி அங்க ஒரே சத்தமா இருக்கு ? பேப்பரிலிருந்து நிமிர்ந்து பார்த்த மூக்கையண்ணன் கேட்டார்.

""ஒரு பொம்பளை ரவுசு விட்டுக்கிட்டு இருக்குண்ணே..அண்ணன் கல்யாணத்துக்கு கோயிலுக்கு போச்சாம்...அங்க பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த இதுக்கும் ஒரு தாலியைக் கட்டி கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாங்களாம்..அண்ணன் கல்யாணம் முடிஞ்ச கையோட, இந்தம்மாவக் கூப்பிட்டு இது பக்கத்துல நின்ன ஆளு கிட்ட ஒரு தாலியக் குடுத்து இது கழுத்துல கட்ட சொல்லிட்டாங்களாம்"""

"அடப்பாவி..."என்று விவேக் பாணியில் சவுண்டு விட்ட மலையாண்டி "இப்படியெல்லாம் கூடவா நடக்கும்.?..இந்தப் பொம்பளை கிட்ட கேக்கக் கூட இல்லையாமா?...அது சரி தாலி கட்டுர வரை இது மறுத்து பேசலையா..கம்முனு வாயில கொளுக்கட்டைய வச்சுக்கிட்டு நிண்டுக்கிட்டிருந்துச்சு? கூட இருந்த அண்ணன்காரனும் ஒண்ணும் சொல்லலியா ?" என்று கேள்விகளை அடுக்கினான்

"அண்ணன் கல்யாண மூடுல கம்முனு இருந்துட்டாராம்...இது அண்ணன் கல்யாணத்துல வச்சு அங்க இருந்த பெரியவங்களை எதுத்து பேச வேண்டாம் அப்படீன்னு "மரியாதை நிமித்தமா " கம்முனு இருந்துச்சாம்பா" என்றான் மணி

" அட என்னப்பா..இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க ? அது சரி ..இந்தக் கூத்து எப்ப நடந்துச்சு ?இப்ப என்னாச்சு ? என்றார் மூக்கையண்ணன்

"அது ஆச்சுண்ணே நாலு மாசம்..இப்ப அந்த ஆளு கூட குடுத்தனம் நடத்தலை..அதுவுமில்லாம போன திருவிழால இது வேண்டாத ஒருத்தரப் பாத்து சிரிச்சு பேசிக்கிட்டு இருந்துச்சாம்.. அதனால கடுப்பாகிப் போய் தாலி கட்டுன ஆளு... இது எனக்கு பொண்டாட்டி இல்லை அப்படீன்னு வெட்டி வுட்டாராம்..இந்தப் பொம்பளையானா... மொதல்ல எனக்கு கண்ணாலமே ஆவலை ...இவரு யாரு அறுத்து வுட அப்படீன்னு ரவுசு விடுது.. "என்றான் மணி

"என்னாங்கடா சொல்றீங்க ...நாலு மாசமா கம்முனு இருந்துச்சா..ஊரெல்லாம் கல்யாணம் ஆயிருச்சு...கல்யாணம் ஆயிருச்சு அப்படீன்னு பேசியிருக்குமேடா இந்த நாலு மாசமா..அப்பவுமா கம்முனு இருந்துச்சு...அண்ணன் மரியாதை ..சபை மரியாதை அல்லாத்தையும் ரொம்ப காப்பாத்தியிருக்கப்பா....டேய் ...தியாக செம்மல்...குடத்திலிட்ட குத்து விளக்குடா..அந்தப் பொண்ணு " என்றார் மூக்கையண்ணன்...

" ரொம்ப ஓவரா பில்டப்பு குடுக்காதீங்க...தாலி கட்டுன ஆளு பாக்குறதுக்கு வெள்ளையுஞ் சொள்ளையுமா அளகா இருந்துருப்பார்..கடச்ச வரைக்கும் லாபம் ..அப்படியே பிக்கப் ஆயி போயிறலாம் அப்படீன்னு சும்மா இருந்திருக்கு..அப்புறம் அந்தாளுக்கு சொத்து பத்து ஒண்ணுமில்லையினு தெரிஞ்சப்புறம் இப்ப சவுண்டு விடுது " என்றான் மலையாண்டி.

" அது சரி..அந்தப் பொண்ணு பேரென்னடா " என்றார் மூக்கய்யண்ணன்

" ராதிகா " என்ற மலையாண்டியிடம் " அப்ப அண்ணன் பேரு ??? " என்று மணி கேட்க அங்கிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

மலையாண்டி வடிவேலு ஸ்டைலில் "ஆரம்பிச்சுட்டாங்கையா...ஆரம்பிச்சுட்டாங்கையா " என்றபடி அங்கிருந்து நடையைக் கட்டினான்

Wednesday, October 25, 2006

250. க்ரீமி லேயர் குறித்து

உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் SC/STக்கான (அரசுப்பணியில் பதவி உயர்வுக்கான) இடஒதுக்கீட்டில் க்ரீமி லேயரை வரையறுப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது (தீர்ப்பின் முடிவாக இதைக் கூறவில்லை என்பது அறியத்தக்கது). இருந்தாலும், இது நிச்சயம் தேவையில்லாத ஒன்றே ! இத்தனை ஆண்டுகள் இடஒதுக்கீடு அமலில் இருந்தும் தலித் மற்றும் பழங்குடியினரின் பிரநிதித்துவம் பல துறைகளிலும் (முக்கியமாக உயர் பதவிகளில்) மிகக் குறைவாகவே உள்ளது என்பது கண்கூடு. அவர்களில் சிலர் நல்ல பதவியில் இருந்தாலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை ! அவர்களில் பெரும்பாலோர் (90 சதவிகிதத்துக்கும் மேலே) சமூகத்தில் உரிய அந்தஸ்து இன்னும் பெறவில்லை என்பதும் நிதர்சனம்.

OBC-க்கான க்ரீமி லேயர் 1992-இல் மண்டல் தீர்ப்பின்போது உச்ச நீதி மன்றத்தால் வரையறுக்கப்பட்டது. அதன் மூலம், OBC பிரிவில், உச்ச/உயர் நீதி மன்ற நீதிபதிகள், UPSC உறுப்பினர்கள், குரூப் A/B, கிளாஸ் I அல்லது II மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்கள், பொதுத்துறை நிறுவன (PSU) அதிகாரிகள், ராணுவத்தில் கர்னல் பதவிக்கு மேல் இருப்பவர்கள் ஆகியோரது பிள்ளைகள் க்ரீமி லேயராக அறிவிக்கப்பட்டு, இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டனர். மேலும், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் சில புரொபஷனல் துறைகள் சார்ந்த வல்லுனர் ஆகியோரின் பிள்ளைகளும், வருடத்திற்கு இரண்டரை லட்சம் வருமானம் உள்ளவரின் பிள்ளைகளும், மண்டல் க்ரீமி லேயரில் அடங்குவர். OBC விஷயத்தில் இது தேவையான ஒன்றே.

ஆனால், இன்ன பிற பிற்படுத்தப்பட்டவருடன் ஒப்பு நோக்கும்போது சமூக நீதி என்ற இலக்கை அடைய தலித்துகள் பத்து மடங்கு தூரம் பயணிக்க வேண்டும் என்று நிச்சயம் கூற முடியும் ! தலித்துகளின் அவல நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. SC/ST க்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் பல அரசுத் துறைகளில் பல காலமாக நிரப்பப்படாமல் இருப்பதையும் பார்க்கிறோம் ! மேலும், தற்போதைய தீர்ப்பு, SC/ST-க்கான க்ரீமி லேயரை வரையறுப்பது குறித்து தெளிவாக எதுவும் சொல்லவில்லை. OBC-க்கான க்ரீமி லேயர் வரையறுத்தலை தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் அப்ளை செய்வது சரியானதல்ல, ஏற்றுக் கொள்ளத் தக்கதும் அல்ல ! இதனால் குழப்பமே மிஞ்சும்.

அடுத்து, அரசுப்பணிகளில் OBC-க்கான இடஒதுக்கீட்டில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள க்ரீமி லேயர் விஷயத்தை, தற்போது நடைமுறைக்கு வர உள்ள, உயர் கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீட்டிலும் எடுத்து வருவதற்கு, ஓட்டு அரசியலில் பேர் போன சிறிதும் பெரியதுமான பல அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்டுகள் தவிர்த்து!) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடஒதுக்கீட்டை நீர்த்து போக வைக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டுகின்றன ! க்ரீமி லேயர் வரையறுக்கப்படாமல் உயர் கல்வி நிறுவன இடஒதுக்கீடு (2007-இல்) அமலுக்கு வந்து, பின்னாளில் இது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டால், நீதிமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் இடையே இன்னொரு பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளது.

இறுதியாக, இப்போதுள்ள உயர் சாதியினர் / இன்ன பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய இரு தரப்பினரிடமும், தலித்துகளுடன் சமூக வளங்களை / பயன்களை சமமாக பங்கிட்டுக் கொள்வதில் பொதுவாக ஒரு மனத்தடை நிலவுகிறது என்பது உண்மை. தலித் மற்றும் பழங்குடியினரின் அவலமும், அவர்கள் சந்திக்கும் வன்கொடுமைகளும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்க, எல்லாரும் வாய் வார்த்தையாக, நமக்கு அவற்றில் எந்த பொறுப்பும் இல்லை என்ற வகையில் பேசிக் கொண்டிருக்கிறோம் !!! தலித்துகளை பொருத்தவரை, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டையே அவர்களால் இன்று வரை நியாயமாக அனுபவித்து பயன் பெற முடியவில்லை ! அப்புறம் என்ன SC/ST யில் க்ரீமி லேயர் ??? எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்களில் க்ரீமி லேயர் என்பதற்கு தகுதியானவர் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் இருப்பர் என்று அறுதியிட்டு கூற இயலும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, October 24, 2006

கிராமத்து அரட்டை அரசியல் --- 5

கி.அ.அ.அனானி அனுப்பிய தொடரின் ஐந்தாவது பாகம்:
****************************
"என்னண்ணே....அப்சலை தூக்குல போடக்கூடாது அப்படீன்னு முதலமைச்சர் கூட சொல்லிட்டாரே" மலையாண்டி சொன்னவாரே வந்தான்.

"ஆமாமா...காஷ்மீர் முன்னாள்... இந்நாள் ரெண்டு பேரும் சொல்லியிருக்காங்க...அதுல இன்னாள் முதல்வர் தூக்குல போட்டா கலவரமாயிடும் அப்படீன்னு சொன்னார்...ஆனா முன்னாள் முதல்வரோ ஒரு படி மேல போயி நீதிபதி உயிருக்கு உத்திரவாதமில்லை அப்படீன்னு பகிரங்க மிரட்டலே விட்டுட்டாரு"என்றார்

"அட நா அவுகளைச் சொல்லலைண்ணே...நம்ம முதல்வர் சொல்லியிருக்குறதை சொன்னேன் " என்றான்

"அப்படியா " என்றான் அப்போதுதான் வந்த மணி.

"ஆமா...நேரடியா அப்சலை குறிப்பிட்டு சொல்லலை..ஆனா முரசொலியில கேள்வி பதில் பகுதில " நமக்கு நாமே திட்டத்துல" அவரே அவரை கேள்வி கேட்டுக்கிட்டு பதில் எழுதுவாரே அதில்"மரண தண்டனை பற்றி உங்கள் கருத்தென்ன? " அப்படீங்கற கேள்விக்கு " கடுமையான குற்றமிழைத்தவனுக்கு மரணம் தண்டனைன்னா..அதில் அவன் அனுபவிக்கும் வலி ரொம்ப குறைவாகத்தான் இருக்கும்...அது தவறு செய்தவனை அவனுடைய தவறை நினைத்து வருந்தும் சந்தர்ப்பத்தை அவனுக்கு அளிக்காது செய்துவிடும்..அதனால் மரண தண்டனையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் "அப்படீன்னு பொருள் படும்படி சொல்லியிருக்காரு "என்றான் மலையாண்டி

"ஆமாமாம்...இதை அவர் இப்ப மட்டும் சொல்லலியே...ராஜிவ் காந்தி கொலை வழக்குல தூக்கு தண்டனை தீர்ப்பானப்பவும் சொன்னாரு" என்றார் மூக்கையண்ணன்

"இப்ப என்னண்ணே ஆகும்..அப்சலை தூக்குல போட்டுருவாங்களா...மாட்டாங்களா? "

"டேய்.... அவனுடைய கருணை மனு ஜனாதிபதி அப்துல் கலாம் கிட்ட போயிருக்கு..அதைப் பார்த்து அவர் என்ன முடிவெடுக்குறாரோ அதுதான்" என்றார் மூக்கையண்ணன்

"அவர் சொந்த முடிவில்லிங்க....அவர் காபினெட் மந்திரி சபைக்கு பரிசீலனைக்கு அனுப்புவாரு..அவங்க என்ன சொல்ராங்களோ அதுதான் ஜனாதிபதி முடிவு அப்படிங்கற பேரில் கருணை மனு ஏற்பு அல்லது தள்ளுபடி அப்படீன்னு வெளியாகும் " என்றான் அங்கு வந்த காலேஜ் படிக்கும் மணிகண்டன்.

"அடேடே..அப்படியா...இது தெரியாம நான் இத்தனை நாளா கருணை மனுவின் மீது ஜனாதிபதி முடிவெடுப்பாருன்னுல்ல நினைச்சுக்கிட்டிருந்தேன்" என்றான் மலையாண்டி.

"இதுல வேடிக்கை என்னன்னா அரசியலமைப்பு சட்டத்துல 72ஆம் பிரிவில் "ஜனாதிபதிக்கு மன்னிக்க முழு அதிகாரம் உள்ளது" அப்படீன்னு இருந்தாலும் மற்ற விஷயங்களைப் போலவே ஜனாதிபதி மந்திரி சபை என்ன முடிவு எடுக்குதோ அதனடிப்படையிலேதான் செயல் படுவார்..."

"அப்ப சட்டு புட்டுன்னு முடிவாயிடும்னு சொல்லு" என்றான் மணி

"அதுதான் இல்லை...இந்த அப்சல் கேசுக்கும் முன்னாலெயே மொத்தம் 20 கருணைமனு முடிவெடுக்கப்படாமல் அப்துல்கலாம் கிட்ட இருக்குதாம்..அதுல ராஜிவ் காந்தி கொலை வழக்குல மரண தண்டனை பெற்ற 3 பேர், 1993-ல் பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவரை கொல்ல பாம் வச்சு 9 பேரை அப்புக்கு அனுப்புன ஆளு, பஞ்சாப்புல முன் விரோதம் காரணமா ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேரை கொன்ன 4 பேர் அப்புறம் நம்ம வீரப்பன் கூட்டாளிங்க 5 பேர் எல்லார் மனுவும் இருக்கு"

"நம்ம சந்தன வீரப்பன் கூட்டாளிங்களா...எதுக்கப்பா" என்றான் மணி

"என்ன சித்தப்பு.... வீரப்பன் உங்க பங்காளி மாதிரி...நம்ம வீரப்பனா...அப்படீன்னு கேக்குறீங்க" என்று கிண்டலடிந்தான் மணிகண்டன்

சிரித்த மூக்கண்ணன் " இவங்க கட்சி போராட்டத்தும் போது இவனும் புகுந்து புறப்பட்டு ரெண்டு மூணு மரத்தை வெட்டிப் போட்டானுல்ல..அதான் மரம் வெட்டுறவனையெல்லாம் பங்காளியா நெனைக்கிறான் போல" என்றார்

"ஆமா..சந்தனவீரப்பன்கூட்டாளிகளேதான்...சைமன், ஞானப்ரகாசம், மீசேகர்,மாதையா, பில்வேந்திரன் அஞ்சு பேருடைய கருணை மனுதான் ...கண்ணி வெடி வச்சு 21 போலிஸ்காரங்களை தூக்குனாங்கல்ல அந்த கேசுல மரண தண்டனை குடுத்தாங்க " என்ற மணிகண்டன்
"இதெல்லாம் இவர் காலத்துதில்லையாம்...இவருக்கு முன்னால இருந்தாருல்ல கே.ஆர்.நாராயணன் அவரு முடிவெடுக்காம விட்டுட்டு போன 12 கேசு..இவர் ஜனாதிபதியானப்புறம் தீர்ப்பான 8 கேசு எல்லாம் சேத்து 20 இருக்கு. கே.ஆர்.நாராயணன் எந்த கருணை மனு மேலையும் முடிவெடுக்காம அப்படியே விட்டுட்டு போயிட்டாரு...அப்துல் கலாம் ஒரே ஒருத்தனை தூக்குக்கு அனுப்பினாரு...போன வருஷம்.... தனஞ்சய் சாட்டர்ஜி அப்படீன்னுட்டு ஒருத்தன் வங்காளத்துல சின்னப் பொண்ணை ரேப் பண்ணி கொன்னுட்டான்..அது மட்டும் மந்திரி சபை பரிந்துரை பேருல கருணை மனு நிராகரிச்சுட்டாரு..அவனை 14-8-2005 ல் தூக்குல போட்டாங்க ...மீதி கேசெல்லாம் அப்படியே இருக்கு "

"அது சரி..அந்த தனஜ்சய் சாட்டர்ஜியை தூக்குல போட்ட போது நம்ம முதல்வர் கருத்து ஏதும் சொன்னாரா? என்றான் மலையாண்டி

"அதுதான் அதுக்கு முந்தியே ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பின் போதே மரண தண்டனை தப்பு அப்படீன்னு தெளிவா சொல்லிட்டாரே ...ஒவ்வொரு கேசுக்குமா தனித்தனியா சொல்லுவாரு" என்றார் மூக்கையண்ணன்

"இப்ப மட்டும் திடீர்னு ஏன் கருத்து சொல்ராரு..அண்ணே சந்தனம் கெடைச்சா எடுத்து பூசுவோம்..சாணி கிடைச்சா பூசுவோமா...அதுமாதிரிதான்...தனஞ்சய் சாட்டர்ஜியை தூக்குல போட்டது கூட பாதி பேருக்கு தெரியாது..அதுனால அப்ப கருத்து கிடையாது...ஆனா அப்சலை தூக்குல போடக்கூடாதுன்னு சொன்னாதான மைனாரிடி ஓட்டு கிடைக்கும் அதுனால நேரடியா சொல்லாம தூக்கு தண்டனை தப்பு ...மரண தண்டனை தப்பு... அப்படீன்னு ஸ்டேட்மென்ட் உட வேண்டியது...இதுல "" கடுமையான குற்றமிழைத்தவனுக்கு மரணம் தண்டனைன்னா..அதில் அவன் அனுபவிக்கும் வலி ரொம்ப குறைவாகத்தான் இருக்கும்...அது தவறு செய்தவனை அவனுடைய தவறை நினைத்து வருந்தும் சந்தர்ப்பத்தை அவனுக்கு அளிக்காது செய்துவிடும்."" அப்படீன்னு வியாக்யானம் வேற...வேண்ணா ஒண்ணு பண்ணலாம் ..இனிமே அங்கங்க பாம் வக்கிறவனை கூப்பிட்டுட்டு வந்து மந்திரியாக்கிரலாம்...அவங்களும்...'ஆகா...இவங்கள்ளாம் ரொம்ப நல்லவங்க " அப்படீன்னு வடிவேலு கணக்க சொல்லுவானுங்க' என்றான்" ஆவேசம் வந்தவனாக மலையாண்டி.

அவனை சமாதானப் படுத்தியபடியே கூட்டம் கலைந்தது.
*******************************
### 249 ###

Monday, October 23, 2006

சிந்திப்பதற்கு சில - II

1. நீ இவ்வுலகில் நிகழ்த்த விரும்பும் மாற்றம், நீயாகவே இருத்தல் வேண்டும் !
--- மகாத்மா காந்தி

2. ஒரு தந்தை தன் மகர்க்கு ஆற்ற வல்ல மிக முக்கிய உதவியென்பது, அவர்களின் தாய் மீது அன்பு செலுத்துவதே !
--- தியோடர் ஹெஸ்பர்க்

3. ஒரு கோழை மட்டுமே, தான் அச்சம் என்பதையே அறியாதவன் என்று பெருமை பேசித் திரிவான் !
--- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்

4. இறந்த காலத்து வெற்றிகளே, எதிர்காலத்து வெற்றிகளின் பெரும்பகைவனாம்
--- அஸிம் பிரேம்ஜி

5. கடுமையான உழைப்பு பிரார்த்தனைக்கு நிகரானது
--- லால் பகதூர் சாஸ்திரி

6. நாம் செய்ய நினைக்கும் காரியத்தின் மீது நம் அனைத்து எண்ணங்களையும் ஒருங்கிணைத்தல் அவசியம். ஒரு புள்ளியை நோக்கி ஒருங்கிணைக்கப்படாத சூரியக் கதிர்கள் வெப்ப சக்தியாக ஒரு போதும் மாறுவதில்லை !
--- அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

7. நீ முடியும் என்று எண்ணினாலும், முடியாது என்று நினைத்தாலும், இரண்டும் சரியானவையே !
--- ஹென்றி ·போர்ட்

8. உடலுறவு என்பது சமையல் போன்றது, இரண்டிலும் திறமையுடன் செயல்பட வேண்டும் அல்லது ஈடுபடாமல் இருப்பது நலம் !
--- ஹேரியட் வேண் ஹார்ன் (பாலா கமெண்ட்: சூப்பர் தல ;-))

9. மிகவும் அதிருப்தியில் உள்ள உங்கள் வாடிக்கையாளர்களே, உங்கள் கற்றலின் மிகச் சிறந்த ஊற்று !
--- பில் கேட்ஸ்

10. உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான 'கிறுக்குத்தனத்தை' நீங்கள் ஒருபோதும் இழக்கக் கூடாது !
--- ராபின் வில்லியம்ஸ் (பொன்மொழி 9-க்கான என் கமெண்ட்டை இதனோடு சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டாம் :))

11. எல்லா அரசியல்வாதிகளும் ஒரே மாதிரியானவர்களே ! நதியே இல்லாத இடத்திலும் பாலம் கட்டுவதாக அவர்கள் உறுதியளிப்பார்கள் !
--- நிகிடா குருஷ்சேவ்

12. நகைச்சுவை (காமெடி) என்பது மின்னலை ஒரு குடுவைக்குள் பிடிப்பதற்கு ஒப்பானது !
--- கோல்டி ஹான்

நண்பர்களே, உங்களுக்கு மிகவும் பிடித்த பொன்மொழி ஒன்றை பின்னூட்டத்தில் இடுங்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, October 20, 2006

கிராமத்து அரட்டை அரசியல் ---4

"சட்டக் கல்லூரியிலெல்லாம் படிக்கிற பசங்க நல்லா பிராக்டிகல் பண்ணுறாங்கப்பா.... நம்ம கல்வித்தரம் நல்லா முன்னேறியிருக்கு " என்றபடி மூக்கையண்ணன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் மலையாண்டி

"என்னது சட்டக் கல்லூரியில ப்ராக்டிகலா? என்னய்யா சொல்லுற ? எதப் பேசுனாலும் புரியாத படிக்கு உங்க கட்சி கொள்கை மாதிரியே பேசுனா என்ன அர்த்தம்..புரியும் படி சொல்லு" என்றான் அருகிலிருந்த மணி

"கொள்கையப் பத்தி...நீங்க பேசுறீங்க...இருக்கட்டும்...இருக்கட்டும் "என்றான் மலையாண்டி

"அட..விஷயத்தை சொல்லுப்பா...கொள்கை விளக்கம் அப்புறம் வச்சுக்கங்க " என்றார் மூக்கையண்ணன்.

"அண்ணே ...போன வாரம் சென்னை பாரிமுனையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரில முதலாண்டுல சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விழா வியாழக்கிழமை ராஜா அண்ணாமலை மன்றத்துல நடந்துச்சாம். அந்த விழாவில் மூன்றாம் ஆண்டு படிக்குற பசங்க சக மாணவிகளை ரவுசு விட்டதுக்காக , நாலாம் ஆண்டு படிக்கிற கணேஷ்பாபு , கிண்டல் செய்த பசங்களை தட்டிக் கேட்டாராம். இதனால, ரெண்டு பார்ட்டிக்கும் கடும் வாக்குவாதம் வந்து டென்சனாயிருச்சாம்.

இதுக்கெடையில, சனிக்கெழமை சாயங்காலம் வகுப்பறைல இருந்த கணேஷ்பாபுவை மூன்றாம் வருசம் படிக்கும் பூபதி உட்பட 39 பேர் கையில் கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியிருக்காங்க. இதுல, பலத்த காயமடைந்த கணேஷ்பாபுவ கவர்மெண்டு ஆஸ்பத்திரில சேத்துருக்காம் அங்க இருக்குற டாக்டருக்கு படிக்கிறவங்கள்லாம் அவர் ஒடம்புல டிஞ்சர் போட்டு பஞ்சர் ஒட்டி பிராக்டிகல் பண்ணிப் பாக்குறதுக்காக.

இதுக்கு நடுவுல சட்டக் கல்லூரி முதல்வர் ஜெயமணி எஸ்பிளேனடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துருக்காரு. இப்புகாரின் பேரில் கல்லூரியில் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 39 மாணவர்கள் மீது 147, 148, 448, 324, 506(2) உள்ளிட்ட பிரிவுகள்ள வழக்குப் பதிவு செய்து,மாணவர்களை போலீஸ் தேடிக்கிட்டு இருக்காம்.""

""பாருங்கண்ணே சட்டக்கல்லூரில படிக்கிறப்பவே எவ்வளவு பொறுப்பா பிராக்டிகல் பரிட்சையெல்லாம் செய்யுறாங்க.இப்ப இந்த பசங்களுக்கெல்லாம் 147, 148, 448, 324, 506(2) எல்லா செக்ஸனும் தரோவா ஆயிருமில்லண்ணே...பாருங்க நம்ம பசங்கள்லாம் படிக்கும் போதே என்ன சுறுசுறுப்பா தொழில் கத்துக்குறாங்க"""" என்றான் மலையாண்டி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.

"ம்ம்...நக்கலு...ஏண்டா மூணாம் கிளாசு தாண்டாத நீயி பட்டணத்துல படிக்கிறவன பாத்து நக்கல் வுடுறியா.... நேரம்டா " என்றார் மூக்கையண்னன்.

மூணாம் கிளாசு என்று நக்கலடித்ததில் கடுப்பான மலையாண்டி " ஏண்ணே,,ஒரு வேளை இப்படி இருக்குமோ?? உங்க கட்சில சேர்ந்து கார்ப்பரேசன் சட்டசபை எலெக்சனுலல்லாம் ஓட்டு சேகரிக்க இப்பலேருந்தே அடிப்படை உறுப்பினர் தகுதிய வளத்துக்குறாங்களோ என்னமோ " என்றான்.

"டேய்...யாரச் சொன்ன ...போன கார்ப்பரேசன் எலக்சன்ல அராஜகத்தை ஆரம்பிச்சு வச்சது ஒங்க கட்சி ..அதுக்குத்தான் இப்ப நாங்க கொஞ்சம் பதில் மரியாதை செஞ்சோம்... எங்க தன்மானத் தலைவரே சொல்லிட்டருல்ல..போடா பெருசா பேச வந்துட்டான்" என்றார் மூக்கையண்ணன் .

" அப்ப நாங்க செய்யுறதப் பாத்துதான் காப்பியடிப்பீங்க...உங்களுக்குன்னு சுயமா புத்தி கிடையாதா? " என்றான் மலையாண்டி

"டேய், யாரப்பாத்து புத்தி கிடையாதான்னு கேட்ட " என்று மூக்கையண்ணன் மலையாண்டியை அடிக்க ஓடி வர மணி இடையில் புகுந்து தடுக்கப் போக அந்த இடமே பன்றி நோண்டிப் போட்ட கப்பக்கிழங்கு காடு போல களேபரமானது.

அரசுப்பணியில் இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்

**********************************
எஸ்.சி., எஸ்.டி. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சரியே: உச்ச நீதிமன்ற தீர்ப்பு

அரசு வேலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது சரியே என்று உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. அதே சமயம் ஒட்டுமொத்த ஒதுக்கீடு மொத்தப் பதவியில் 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும், பொருளாதார ரீதியாக வசதியாக இருக்கும் உயர் வருவாய்ப் பிரிவினருக்கு இச் சலுகை தரப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியது.

தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால், கே.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.எச். கபாடியா, சி.கே. தாக்கர், பி.கே. பாலசுப்பிரமணியன் அடங்கிய பெஞ்ச் வியாழக்கிழமை இத் தீர்ப்பை வழங்கியது.

அரசியல் சட்டத்தின் 77, 81, 82, 85-வது திருத்த சட்டங்களை ஆட்சேபித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியல் சட்டத்தின் அடிப்படையையே இத் திருத்தங்கள் மாற்றுவதாகவும், அனைவரும் சமம் என்ற அரசியல் சட்டப் பிரிவுக்கு முரணாக இச்சலுகை இருப்பதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

அரசு வேலையில் சேர்ந்த பிறகு ஊழியர்கள் அனைவரும் சமமாக பாவிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பதவி உயர்வில் முன்னுரிமை வழங்குவது மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனச்சோர்வையும், பணியில் ஈடுபாட்டுக் குறைவையும் ஏற்படுத்தும் என்று மனுதாரர்கள் ஆட்சேபித்தனர்.

இந்த ஆட்சேபங்களை பெஞ்ச் தள்ளுபடி செய்தது. ஆண்டாண்டு காலமாக அழுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள் சமூகத்தில் சம அந்தஸ்தைப் பெற, இட ஒதுக்கீடு என்பது சமூக நீதியை வழங்கும் கருவியாக இங்கே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட துறையில் அல்லது பதவியில் இப் பிரிவினரின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது என்று அரசு கருதினால், இப்படிப் பதவி உயர்வின் மூலம் இப் பிரிவினரை நியமித்துக் கொள்ள அரசுக்கு உரிமை இருக்கிறது.

அந்தந்த மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப இதை முடிவு செய்யலாம். அப்படிச் செய்யும்போது யாராவது தங்களுக்கு பாதிப்பு நேரிட்டுவிட்டதாகக் கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம்.

எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது. அதே போல, வசதி வாய்ப்புடன் வாழும் உயர் வருவாய்ப் பிரிவினர் இச் சலுகையை அனுபவிக்க இடம் தரக்கூடாது என்று பெஞ்ச் தீர்ப்பளித்தது. நிர்வாகத் திறனையும் அரசு மனதில் கொண்டு இச் சலுகையை வழங்க வேண்டும் என்றும் பெஞ்ச் ஆலோசனை தெரிவித்தது.
*****************************
நன்றி: தினமணி

பி.கு: மேற்கூறிய வழக்கில், இரண்டு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

1. இடஒதுக்கீடு தொடர்பாக அரசு மேற்கொண்ட அரசியல் சட்ட திருத்தங்கள், திருத்தப்பட்ட அரசியல் சட்டத்தின் அடிப்படைத் தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறதா என்பது

2.இடஒதுக்கீட்டை செயல்படுத்தும்போது, Article 16-இல் சொல்லப்பட்டுள்ள சமன்பாட்டையும், கடைபிடிக்கப்பட வேண்டியவற்றையும், அரசு தெளிவாக சீர் நோக்கி பார்ப்பதும், பாவிப்பதும் குறித்து


Article 16 Equality of opportunity in matters of public employment

(1) There shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State.

(2) No citizen shall, on grounds only of religion, race, caste, sex, descent, place of birth, residence or any of them, be ineligible for, or discriminated against in respect of, any employment or office under the State.

(3) Nothing in this article shall prevent Parliament from making any law prescribing, in regard to a class or classes of employment or appointment to an office under the Government of, or any local or other authority within, a State or Union territory, any requirement as to residence within that State or Union territory prior to such employment or appointment.

(4) Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.

(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.

(5) Nothing in this article shall affect the operation of any law which provides that the incumbent of an office in connection with the affairs of any religious or denominational institution or any member of the governing body thereof shall be a person professing a particular religion or belonging to a particular denomination.

உச்ச நீதிமன்றம், முக்கியமாக, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு, க்ரீமி லேயர் வரையறுப்பு, தாழ்த்தப்பட்டவர்களையும், பிற பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்து நோக்கல் என்ற மூன்று விஷயங்களும் அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டியவை என்று தெளிவாகக் கூறியிருக்கிறது. அதே போல், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதின் தேவையை (Article 335-க்கு உட்பட்டு) மாநில அரசுகளே நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறது.

Article 335 Claims of Scheduled Castes and Scheduled Tribes to services and posts

The claims of the members of the Scheduled Castes and the Scheduled Tribes shall be taken into consideration, consistently with the maintenance of efficiency of administration, in the making of appointments to services and posts in connection with the affairs of the Union or of a State.

க்ரீமி லேயரை SC/STயில் வரையறுப்பது தேவையில்லை என நினைக்கிறேன். இட ஒதுக்கீடு அமல்படுத்தி இத்தனை வருடங்கள் ஆகியும், அவர்களில் பலர் அதன் பலனை முழுமையான அளவில் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்பிரிவினரின் பிரநிதித்துவம், பல துறைகளிலும் இன்றும் குறைவாகவே உள்ளது.

அதே நேரத்தில், OBC-யில் க்ரீமி லேயரை வரையறுப்பது நிச்சயம் தேவையானதே ! அல்லது, OBC-யில் இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியதாக அறியப்படும் சில சாதிகளை விலக்குதல் வேண்டும்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, October 15, 2006

சில கார்ட்டூன்கள்

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting

கிராமத்து அரட்டை அரசியல் - 3

கி.அ.அ.அனானி மெயிலில் அனுப்பிய 3-வது பாகம் பதிவாக ! என் நேரடி அனுபவம், அரட்டையைத் தொடர்கிறது !!!

*****************************
வழக்கம் போல் மூக்கையண்ணன் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தார்.வீரம்மாள் பையன் சின்ராசு பள்ளிக்கூட பையுடன் அழுது கொண்டே ஓடி வந்தான்...பின்னாலேயே வீரம்மாள் அவனை அடிக்க கையில் புளியங்கொம்புடன் துரத்திக் கொண்டு வந்தாள்.

""எலே சின்ராசு..நில்லு...ஏண்டா அழுவுற"""

அதற்குள் அவனை பிடித்து விட்ட வீரம்மாள் சுளீர் என்று ஒன்று வைத்தாள்.

சின்ராசை அவளிடம் இருந்து பிரித்து அடி படுவதை தடுத்த மூக்கய்யண்ணன் " ஏ.. வீரம்மா...என்ன..கோட்டி...கீட்டி பிடுச்சுருச்சா..புள்ளையப்போட்டு புளிய விளாரால இந்த அடி அடிக்கிற...அப்படி என்ன செஞ்சான்""

"இதக் கேளுங்கண்ணே..கணக்குல முட்டை வாங்கிட்டு வந்துருக்கான் ... கேட்டா சரியாதான் கணக்கு போட்டேன் அப்படீங்குறான் மூதி...தெனைக்கும் வாத்தி என்னைக் கூப்பிட்டு திட்டுது "

" அப்படி என்ன தப்பா போட்ட "

"786 + 734 எவ்வளவுன்னு கேட்டாங்க...நானு கூட்டி கரெக்டா 1672-ன்னு சொன்னேன் அதுக்கு வாத்தியார் தப்புன்னு சொல்லி முட்டை போட்டுட்டார் " என்றான் சின்ராசு.

கூட்டிப் பார்த்த மூக்கய்யண்ணன் " எலே 786 + 734 =1520 ல்ல வரும்...1672 எப்படிலெ வரும் ? சரியா படி" என்றார்

"இல்லை மாமா...1672 தான் சரி... அதிகாரிகள் சொன்னாங்கன்னுட்டு பேப்பர்ல கூட போட்டிருந்தாங்களே " என்றான்

"என்னாது...சரியா...அதுவும் அதிகாரிகள் சொன்னாங்களா? என்னடா சொல்ற ?"

"மாமா..மாநகராட்சி தேர்தல்ல சென்னை துறைமுகம் தொகுதி 23 ஆம் வார்டுல 394 ஆம் நம்பர் பூத்துல மொத்தம் 786 ஆண் மற்றும் 734 பெண் வாக்காளர்களாம்...தேர்தல் முடிஞ்சப்புறம் மொத்தம் 1672 வாக்குகள் பதிவாகியிருந்ததாம்...அதிகாரிகள் கூட்டி கழிச்சு பாத்து வெற்றிகரமா நூத்துக்கு நூத்துபத்து சதவிகிதம் வாக்கு பதிவாகியிருக்கு அப்படீன்னு அறிவிச்சாங்களாம். அப்புறம் ஞானோதயம் வந்து அடடா.....என்னதான் எல்லாரும் ஓட்டு போட்டாலும் நூறு சதவிகிதத்துக்கு மேல வாக்கு பதிவாகக்கூடாதேன்னு கண்டு புடிச்சு அந்த பூத்துல மறு வாக்கு பதிவு பண்ணி அப்ப எவ்வளவு ஓட்டு பதிவாகுதுன்னு பார்க்கலாம் அப்படீன்னு புது ஓட்டு பெட்டிய வச்சுகிட்டு குத்த வச்சு உக்காந்துருக்காங்களாம்..இன்னும் படிச்ச அதிகாரிகளுக்கே இந்தக் கனக்குக்கு சரியா விடை தெரியலை..அதுக்குள்ள எங்க வாத்தியார் கணக்கு தப்புன்னுட்டார்...எங்க ஆத்தா அடிக்க வருது...நீங்க வேற பஞ்சாயத்து பண்ண வந்துட்டீங்க..போனீங்களா " என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

அவன் பதிலைக் கேட்டு மூக்கையண்ணன் முகம் போன போக்கைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் சிரிக்க அந்த இடம் வடிவேலு படம் ஓடும் சினிமா கொட்டகை போல மாறியது.

*************************

கி.அ.அ.அனானி பேசியிருப்பது ஓரிடத்தில் நடந்த கேலிகூத்தைப் பற்றி தான். எனக்கு நேரடி அனுபவம் ஏற்பட்டது. வெள்ளியன்று காலை பத்து மணியளவில் வாக்குச்சாவடிக்கு சென்றிருந்தேன். அலுவலர்கள், காவலர் தவிர யாருமில்லை. 'சட்டமன்ற தேர்தலில் இம்மாதிரி இல்லையே, இதென்ன விநோதமாக இருக்கிறதே' என்று எண்ணியபடி நுழைந்தால், ஒரு அலுவலர் ஒன்றும் விசாரிக்காமல், ஒரு வாக்குச்சீட்டைக் கொடுத்து, முத்திரையிட்டு வாக்குப்பெட்டியில் போடுமாறு கூறினார் !!!

"என்னங்க, என் பேரை வாக்காளர் லிஸ்டில் சரி பார்க்கவில்லை, வாக்குச்சீட்டின் counterfoilஇல் கையெழுத்தும் வாங்கவில்லை, கையில் மை வைக்க குச்சியும் காணவில்லை !!! உங்கள் Returning officer எங்கே ?" என்று கேட்டதற்கு, அவர் டீ சாப்பிடப் போயிருப்பதாகக் கூறினர். ஒப்புக்காக, எதையோ செய்து வாக்களிக்க விட்டனர். அங்கிருந்த ஒருவர், வாக்குப்பெட்டிகள் ஏற்கனவே போய் விட்டதால், நீங்கள் அளித்த வாக்கு வேஸ்ட் என்றார் !!! "என்னங்க, இப்டி சொல்றீங்க?" என்றதற்கு, "சார், எங்களுக்கும் பிள்ளைக் குட்டி இருக்குல்ல" என்றவுடன், வெளியில் இருந்த போலிஸ் அதிகாரியிடம் சென்று, "என்ன சார், இது ? ஒரே கூத்தா இருக்கு" என்றேன். அவர் "ஒன்றும் சொல்வதற்கில்லை, ஏதோ வோட்டு போட விட்டார்கள் இல்லையா, போய் ஒங்க வேலையைப் பாருங்கள்" என்றார். அவருக்கு என் நன்றியை தெரிவித்தேன் !!! வெளியே இருந்த சிலர் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தது ஏன் என்று விளங்கவில்லை ;-)

எது எப்படியிருந்தாலும், வாக்குச் சாவடிக்கு தைரியமாகச் சென்று என் ஜனநாயகக் கடமையைச் செய்ததிலும், என் ரேஷன் கார்டைக் காப்பாற்றிக் கொண்டதிலும் (மருத்துவர் ஐயா, தேர்தலில் வாக்கு போடாதவர்களின் ரேஷன் அட்டைகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் :)) எனக்கு பரம திருப்தி. அந்த திருப்தியோடு, மாதாந்திர 'புவா'வுக்கு வழி செய்யும் உருப்படியான வேலையைத் தொடர அலுவகலம் சென்றேன் !!! போகும் வழியில், பாஜக வேட்பாளர், ஒரு ஐந்து பேரோடு மெயின் ரோட்டின் நடுவில் நின்றபடி, பரிதாபமாக "ஜனநாயகப் படுகொலை ஒழிக" என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இன்னும் சற்று தொலைவில், டாடா சுமோக்கள் அழகாக அணி வகுத்துச் சென்றதையும் பார்த்தேன் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails